Skip to main content

மகேஷ் பொய்யாமொழியை வியப்பில் ஆழ்த்திய சிறுமி: இவர் செய்த சாதனைதான் என்ன?

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

Mahesh Poiyamozhi;the girl: What is his achievement?

 

சுமார் ஆயிரம் பேர் அமர்ந்திருந்த அரசு விழா அது.... விழா மேடையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், திருவையாறு எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்பட பல வி.ஐ.பி-க்கள் அமர்ந்திருக்கிறார்கள்.  

 

நாற்பது நொடிகளில் 60 தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களைச் சொல்லி புதிய உலக சாதனை புரிந்த, நான்காம் வகுப்பு சிறுமி இனியா இப்போது பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு செய்ய, கம்பீரமாக மைக் பிடித்த அந்த சிறுமி, தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை மள மளவென அழகிய உச்சரிப்புடன் சொல்லி முடித்தபோது, ஒட்டுமொத்த அரங்கமும் வியப்பில் ஆழ்ந்தது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மிகுந்த நெகிழ்ச்சியுடன், சிறுமி இனியாவுக்கு கை கொடுத்து, பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

 

இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களில் பலரும், இனியாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தஞ்சை ஆட்சியர், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டவர்கள், சிறுமி இனியாவின் சாதனை குறித்து மிகுந்த ஆச்சர்யத்துடன் பாராட்டி, வாழ்த்தினார்கள். தொன்மையான தமிழ் இலக்கிய நூல்கள் என்று சொன்னாலே அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி என ஒரு சில பெயர்களை தான் நம்மால் நினைவில் வைத்து பட்டியலிட முடியும். இதற்கு மேல் உள்ள ஏராளமான தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை நினைவில் வைத்து கொள்வதும், உச்சரிப்பதும் பெரியவர்களுக்கே மிகவும் சவலானது. கடினமான பெயர்களைப் பார்த்து படிப்பதற்கேகூட பலரும் திணறிப்போவார்கள். ஆனால் தஞ்சையைச் சேர்ந்த, நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி இனியா, 60 தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை, அதுவும் நாற்பதே நொடிகளில்  சொல்வது,  மிகப்பெரிய சாதனை என என தமிழ்ப் பேராசிரியர்களே ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள்.

 

Mahesh Poiyamozhi;the girl: What is his achievement?

 

பழங்கால தமிழ் இலக்கிய நூல்கள் இத்தனை உள்ளதா?' என நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு கிடுகிடுவென பட்டியலிட்டு, அழகிய உச்சரிப்புடன் அசத்தும் சிறுமி இனியா, ஆங்கில வழியில் படிக்கும் மாணவி என்பது தான், திகைப்பின் உச்சம். இனியாவின் இந்த சாதனை வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சிறுமியின் சாதனைக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌவுந்தரரஜன், தமிழக தொழில்துறை அமைச்சர்  தங்கம்,தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட  பலர் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில்  உள்ள எல்.ஐ.சி காலணி, ஜே.ஜே நகரில் வசிக்கும்  ரேவதி-ராமகிருஷ்ணன் தம்பதியின் மகளான இனியா, கிரிஸ்ட் இன்டர்நேஷனல் ஸ்கூலில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

 

இனியாவின் தற்போதைய சாதனை குறித்து, இவரது தாய் ரேவதியிடம் பேசியபோது  ‘’இனியா, இரண்டு வயசு குழந்தையா இருக்கும்போதே, ஜனாதிபதி, ஆளுநர், பிரதமர், முதலமைச்சர் பெயர்களை சொல்லுவாங்க. அதை பார்த்துட்டு விருந்தாளிங்க, நண்பர்கள் எல்லாம் ஆச்சர்யப்படுவாங்க. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோட படங்களை பேப்பர்லயோ, டி.வி-யிலயோ பார்த்துட்டா,  ரொம்ப குஷியாகி, அவங்களை பத்தி ரொம்ப கரெக்டா சொல்லுவாங்க.  

 

எல்.கே.ஜி படிக்கும்போது ஸ்கூல் ஆண்டுவிழாவில் மேடையில நின்னு, செல்ஃபோன் அதிக நேரம் யூஸ் பண்றதுனால ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இங்கிலீஷ்ல இனியா பேசினாங்க. சிறுதானியங்கள், அமேசான் காடு, அன்னிபெசன்ட் அம்மையார் பத்தியெல்லாம் இங்கிலீஷ்ல பேசியிருக்காங்க. நம்ம தாய்மொழியான தமிழ்ல இனியாவை சாதிக்க வைக்கணுங்கறது எனக்கு ஆசையா இருந்துச்சு. தமிழ் இலக்கிய நூல்களோட பெயர்களைச் சொல்லி இதுவரைக்கும் யாரும் உலக சாதனை புரிஞ்சதில்லைனு தெரிய வந்துச்சு. ஆனா இது சாத்தியமானு ஆரம்பத்துல தயக்கமாதான் இருந்துச்சு. ஆனாலும் நம்பிக்கையோடு, 60 தமிழ் இலக்கிய நூல்களோட பெயர்களை ரொம்ப குறுகிய நேரத்துக்குள்ள சொல்ல வைக்கணும்னு முடிவெடுத்தேன். இதற்கு குறைந்தபட்சம் ரெண்டு மாதமாவது இனியாவுக்கு பயிற்சி தேவைப்படும்'னு நினைச்சேன். ஆனால், இனியா 7 நாள்களிலேயே தயாராகிட்டாங்க. இனியாவோட சாதனையை நினைச்சி, ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எல்லோருக்கும் எல்லாம் அதுதான் திராவிட மாடல் அரசு” - அமைச்சர் அன்பில் மகேஷ் பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister Anbil Mahesh campaigned Everything for everyone is the Dravidian model govt

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 39, 40, 41, 42 ஆகிய வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

அப்பொழுது திருவெறும்பூர் பகுதி கழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வேட்பாளர் துரை வைகோ ஆகியோருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் மத்தியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- எல்லோருக்கும் எல்லாம் என்று அமையப்பெற்றது தான் நமது திராவிட மாடல் ஆட்சி. இந்த திராவிடமாடல் ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காகவே அரும்பாடு பட்டு ஆட்சி செய்து கொண்டிருப்பவர் நமது தமிழக முதல்வர். இந்தியா கூட்டணி வெற்றிபெறும் பொழுது ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் முழுவதும் அகற்றப்படும். தற்போது மார்ச் மாதம் வரை மாணவர்கள் வாங்கியுள்ள கல்விக் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். பெண்கள் தான் நாட்டின் கண்கள் என தமிழக முதல்வர் அடிக்கடி கூறி வருகிறார். ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்க கூடியவர்கள் பெண்கள் தான் . ராகுல் காந்தியும் நமது தமிழக முதல்வரும் அண்ணன் தம்பியாய் இருந்து வருகின்றனர். எனவே மத்தியில் இந்தியா கூட்டணியான ஆட்சி அமைந்தால்தான் நமக்கு உண்டான அனைத்து கோரிக்கைகளையும் நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். நமக்குத் தேவையான நிதியைப் பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அமைத்து நிறைவேற்ற முடியும்.

இன்றைக்கு பெட்ரோல் டீசல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய பாசிச பாஜக ஆட்சியை முற்றிலுமாக அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் கூறியது போல் மத்தியில் யார் வரவேண்டும் என்பதை காட்டிலும் மத்தியில் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல் தான் இந்தத் தேர்தல். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான, சமத்துவநாளில் அவர் எழுதிய அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியை மக்கள் அனைவரும் தூக்கி எறிய வேண்டிய தேர்தல் தான் இது.  எனவே மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து நாம் வாங்கும் 500 ரூபாய் சிலிண்டரை அடுப்பில் பற்ற வைக்க வேண்டும் என்றால் அதற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பொதுமக்களாகிய உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரக் கூட்டத்தில் மாநகரச் செயலாளரும், மண்டல தலைவருமான மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், திருவெறும்பூர் பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சிவகுமார், 41 வது வட்ட செயலாளர் அப்பு என்கின்ற கருணாநிதி, 42 வட்டச் செயலாளர் புண்ணியமூர்த்தி தேர்தல் பொறுப்பாளர்களான மறைமலை, தனசேகர் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்ல மண்டி சோமு, தமிழ் மாணிக்கம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Next Story

“தொழிலாளர்களின் குரலாக ஒலிக்க துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அன்பில் மகேஷ்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Vote Durai Vaiko to be the voice of workers says Anbil Mahesh

இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ம.தி.மு.க. சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் துரை வைகோவுக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மாலை அணிவித்தும், பூக்களைத் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தொண்டர்கள் புடைசூழ வேட்பாளர் துரை வைகோ நேற்று பிரச்சாரம் செய்து தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பொன்மலை ரெயில்வே பணிமனையின் ஆர்மரிகேட் பகுதியில் ரெயில்வே ஊழியர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். தொடா்ந்து பெரியார், அம்பேத்கர், மகாத்மா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து, பொன்மலை அடிவாரம், ஜீவாவீதி, கொட்டப்பட்டு காமன்மேடை, ஐஸ்வர்யாநகர், ரன்வேநகர், எம்.ஜி.ஆர்.நகர், பேன்சிநகர், பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், திருமலைநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, கம்பிகேட், மிலிட்டரி காலனி ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- தி.மு.க. என்றும் தொழிலாளர்கள் பக்கம் தான் நிற்கும். அதுபோல் தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்றால் அங்கெல்லாம் வைகோ வந்து, அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார். நெய்வேலியில் 30 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒளிவிளக்கை ஏற்றியவர் வைகோதான். அந்த வகையில் அவருடைய மகன் துரை வைகோ தான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தொழிலாளர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

பிரசாரத்தில் தி.மு.க. மாநகர செயலாளர் மு.மதிவாணன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழககுமார், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநிலத் தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில ஆபத்துதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநிலச் செயலாளர் கேப்டன் சுபாஷ் ராமன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருச்சி கிழக்கு மாநகரம், கிழக்கு தொகுதிக்குட்பட்ட கமான் வளைவு, சந்து கடை, அந்தோணியார் கோவில் தெரு, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தனர்.