Skip to main content

மகளிர் உரிமைத் தொகை; இன்றே வரவு வைக்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

magalir urimai amount has been credited in the bank today

 

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்த தமிழ்நாடு அரசு, கடந்த மாதம் வீடுதோறும் விண்ணப்பங்கள் பெற்று பின்னர் அதனைக் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சரி பார்த்துள்ளனர். பலருக்கு வங்கிக் கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு இல்லாததால் அருகில் உள்ள தபால் நிலையம், கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க செய்துள்ளனர். இதற்கான முதல்கட்ட பணிகள் அனைத்தும் கடந்த வாரம் முடிவடைந்தது.

 

இந்த திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதியான நாளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், குடும்பத் தலைவிகள் கொடுத்துள்ள வங்கிக் கணக்குகள் சரிதானா என்பதைச் சோதனை செய்ய கடந்த சில நாட்களாக 10 பைசா மற்றும் ஒரு ரூபாய் என ஏராளமானவர்களுக்கு அனுப்பி சோதனை செய்தனர். 

 

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி எனப் பல சுற்று வட்டார கிராமங்களிலும் உள்ள குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இன்று மதியத்திலிருந்தே ரூ. 1000  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வரவாகி உள்ளது. நாளை முதலமைச்சர் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் முன்பே பணம் கிடைத்துள்ளதாக ஏராளமான குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், ஒவ்வொரு கிராமத்திலும் 50 சதவீதம் குடும்பத் தலைவிகளுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்ட 10 பைசா மற்றும் ஒரு ரூபாய் அனுப்பியதற்காக எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை என்பதால் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மேலும் குறுஞ்செய்தி வராதவர்கள் என்ன செய்ய வேண்டும் யாரை அணுக வேண்டும் என்றும் தெரியவில்லை என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்