/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/suresh322.jpg)
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்ட் போராளியான இவர், கேரள வனப்பகுதிக்குள் மறைந்து இருந்து கூட்டாளிகளுடன் செயல்பட்டு வந்தார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு கேரளாவின் தண்டர்போல்ட் அதிரடிப்படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய உடலை நீதிமன்றம் மூலம் பெற்று சேலம் கொண்டுவந்த குடும்பத்தினர், சொந்த ஊரில் தகனம் செய்தனர்.
இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட மாவோயிஸ்ட்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும், 'ஆயுதம் ஏந்துவோம்' என்றும் 'ரத்தக் கடனை ரத்தத்தால் பழி தீர்ப்போம்' என்றும் சபதம் செய்தனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மொத்தம் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடக்கத்திலேயே, மணிவாசகத்தின் மனைவி கலா, தங்கைகள் சந்திரா, லட்சுமி, மைத்துனர் சாலிவாகனன், மதுரையைச் சேர்ந்த விவேக், காடையாம்பட்டியைச் சேர்ந்த சுதாகர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேர்தல் நெருக்கத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்க சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஓமலூர் டி.எஸ்.பி. சோமசுந்தரம், தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாவதி மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர், கியூ பிராஞ்ச் காவல்துறையினர் ஆகியோர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சேலத்தைச் சேர்ந்த (இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த) மாவோ ஆதரவாளர்கள் செல்வராஜ் (55), பாலன் (41), சீனிவாசன் (66), சித்தானந்தம் (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், மதுரை மாவட்டம் இந்திரா நகர் முதல் தெருவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் சுரேஷ் ராஜன் (45) என்பவரை வியாழக்கிழமை (பிப். 18) இரவு, சேலம் மாவட்டக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை வெள்ளியன்று காலை தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்தனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் எங்கெங்கு சுற்றித்திரிந்தார்? யார் யாருடன் தொடர்பில் இருந்தார்? அவர் பின்னணியில் உள்ள மாவோக்கள் யார் யார்? பாதுகாப்பு கொடுத்த நபர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்களை விசாரித்தனர். விசாரணை முடிந்ததை அடுத்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஒரு பெண் உள்பட மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)