Madurai is not Murugan Convention but BJP's political convention says p shanmugam

மதுரையில் ஜூ22 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகள் உட்பட முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தி மதுரையில் "குன்றம் காக்க.. கோயிலைக் காக்க" என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள திருப்பரங்குன்ற மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுக்க முயன்ற போது இந்து முன்னனியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரையில் இந்து முன்னணி சார்பாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டு 144 தடை உத்தரவு வரை சென்றது. இந்த நிலையில் தற்போது மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ‘மதுரையில் நடக்க இருப்பது முருகர் மாநாடு அல்ல, சங்கிகளின் மாநாடு’ என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்திருந்தார்.

Advertisment

அந்த வகையில் சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “மதுரையில் ஜூன் 22 நடக்கவிருப்பது ஆன்மீக மாநாடல்ல, பாஜகவின் அரசியல் மாநாடு. மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பாஜக தனது அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான் பாஜகவின் அகில இந்திய தலைவர் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை இம்மாநாட்டிற்கு மக்களை திரட்டும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

வடஇந்தியாவில் ராமர் கோவில் என்ற பெயரில் கலவரத்தை உருவாக்கி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். தமிழ்நாட்டில் முருகனை முன்னிறுத்தி கலவர பூமியாக்கி ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்கின்றனர். முருகனின் உண்மையான பக்தர்கள் பாஜகவின் சதியை புரிந்து கொண்டு இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.