Skip to main content

“ஓட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடு!” -அமைச்சர்களை விளாசும் பசும்பொன் பாண்டியன்!

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

 

மதுரை பாராளுமன்ற தொகுதியில் நிர்மலாதேவியின் வழக்கறிஞரும், அதிமமுக வேட்பாளருமான பசும்பொன் பாண்டியன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். மதச்சார்பின்மையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்துவரும் அவர்,  “ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், முத்துராமலிங்கத்தேவர், காமராஜர், கே.டி.கோசல்ராம் போன்ற தலைவர்களைப் போல் மக்கள் பிரச்சனைகளுக்காக இப்போது யாரும் குரல் கொடுப்பதில்லை.

 

p

 

எட்டு வருஷம் செல்லூர் ராஜு மந்திரி. ராஜன் செல்லப்பா அஞ்சு வருஷம் மேயர் மதுரையில. அஞ்சு வருஷம் எம்.பி. இப்ப எம்.எல்.ஏ. மதுரையில் என்ன நடந்திருக்கிறது. என்னென்ன திட்டம் செயல்படுத்தியிருக்காங்க? என்ன பண்ணியிருக்கோம்னு நீங்க சொல்லுங்க. இப்பவே நான் இறங்கிப் போயிடறேன். மக்கள் போராட்டத்துக்காக வழக்கறிஞராக இருந்தும் 27 முறை சிறை சென்றிருக்கிறேன். அந்தத் தகுதியோடு பேசுகிறேன். கோபாலகிருஷ்ணன் இங்கே எம்.பி.யா இருந்தாருல்ல. அவரைக் கூட்டிட்டுவந்து என்ன சாதனை பண்ணியிருக்கோம்னு சொல்லுங்க.

 

இன்னும் என்ன சாதனை பண்ணவேண்டியிருக்குன்னு சொல்லி மகனுக்கு ஓட்டு கேளுங்க. மானம் கெட்டவர்களே! வாக்காளர்களின் இயலாமையைப் பயன்படுத்தி ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுத்திருக்கீங்க.  தேர்தல் ஆணையம் மோடியின் கையில் இருக்கிறது. அதனால்தான், இந்தக் கூவத்தூர் எடப்பாடி, மோடியின் காலில் விழுந்து நக்கிப் பிழைத்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தைக் கையில் வச்சிக்கிட்டு.. போலீஸ் ரோட்டுல நிற்குது. உள்ளே பணம் பட்டுவாடா ஆகிக்கிட்டிருக்கு. தைரியமா பண்ணுறாங்க. போலீஸை மெயின்ல நிப்பாட்டிக்கிட்டு முன்னூறு முன்னூறு ரூபாய் பட்டுவாடா நடக்குது. 

 

அட, மானம் கெட்டவர்களே!  செல்லூர் ராஜுவுக்கு பதவி தேவையா? இங்கிலாந்தில் உள்ள தன்னோட சொத்தையெல்லாம் விற்று பென்னிகுக் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டினார். நீ என்ன பண்ணுன? அந்த அணையில் போய் தெர்மாகூல் விட்ட முட்டாப்பய நீயெல்லாம் ஒரு மந்திரியா இருக்கிற இந்த நாட்டுல? 300 ரூபாய் கொடுத்தா மக்கள் ஓட்டு போட்டிருவாங்கன்னு நினைக்கிறீங்க.

 

இந்தத்தடவை அது பலிக்காது. நீ ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் உன்கிட்ட இருக்கிற பணம் வற்றாது. அதிமுக தொண்டன் ஒருத்தனுக்காச்சும் நல்லது பண்ணிருக்கியா? ரேஷன் கடை எடையாளர் பணிக்கு ஒன்றரை லட்ச ரூபாய். இல்லைன்னு சொல்லு பார்ப்போம். இல்ல ராஜன் செல்லப்பா யாருக்காச்சும் நல்லது செஞ்சிருக்காருன்னு சொல்லுங்க. எம்.எல்.ஏ.வா இருந்து, எம்.பி.யா இருந்து, மந்திரியா இருந்து ஒண்ணும் செய்யல நீங்க. இதுல மகன் வந்து என்னத்த கிழிக்கப்போறாரு? பதவிக்கு வெறிபிடிச்சு அலையறாங்க.

 

ஏன் ராத்திரி களவானிப்பய கணக்கா.. சாமக்கோடாங்கி மாதிரி வீடு வீடா திரியறீங்க? ஓட்டுக்கு ஏன் 300 ரூபாய் பிச்சைக்காசு மாதிரி கொடுக்கிற. ஒரு லட்ச ரூபாய் கொடு. ஜெயலலிதா இறந்தபிறகு இந்த ஆட்சியில் அமைச்சர்கள் கோடிகோடியா கொள்ளையடிக்கிறாங்க. அந்தக் கொள்ளைப்பணத்தை வச்சிக்கிட்டு, நாய்க்கு எலும்புத்துண்டு போடற மாதிரி நினைக்கிறாங்க. மக்களே! அவங்களுக்கு நல்லா நாமத்தைப் பூசிவிடுங்க.” என்றெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எதிராக தடாலடியாகப் பேசி பிரச்சாரத்தில் கலக்குகிறார் பசும்பொன் பாண்டியன். 


 

சார்ந்த செய்திகள்