Skip to main content

“13 ஆயிரம் என்ஜின்களில் 65ல் மட்டுமே பாதுகாப்பு கருவி..” - மத்திய அரசை சாடிய சு. வெங்கடேசன் எம்.பி

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

madurai mp su venkatesan press statement about odisha train incident 

 

ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் ரயில் விபத்து குறித்து சு. வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரிசாவின் பகனகா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து விலைமதிக்க முடியாத மனித உயிர்களைப் பறித்துள்ளது. ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்துக்கு ரயில் தடம் புரண்டது, சிக்னல் கோளாறு என்ற இரண்டு வகையான காரணங்கள் வெளியாகி உள்ளன. எது உண்மையான காரணம் என்பதைக் கண்டறிய ஒரு நீதிபதியின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை செய்வது பாரபட்சமற்றதாக இருக்காது. 1998ல் இதேபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டபோது அன்றைக்கு இருந்த வாஜ்பாய் அரசு, நீதிபதி கண்ணா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் நியமித்தது. அது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி காரணத்தையும் தீர்வையும் முன் வைத்தது. எனவே விசாரணை கமிஷன் நீதிபதியின் தலைமையில் அமைத்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். விபத்துக்கான இரண்டு காரணங்களும் முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. முதல் காரணம் ரயில் தடம் புரண்டதாகும்.

 

இரண்டாவது, விவரப்படி சிக்னல் கொடுக்கப்பட்டும் பாயிண்ட் லூப் லைனுக்கு சென்று அங்கே நின்று கொண்டிருந்த சரக்கு வண்டியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதாவது சிக்னல் கோளாறு . சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக இருந்தபோது 2017ல் ரயில்வே பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அந்த வெள்ளை அறிக்கையில் அவர், ‘இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் 4500 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் பழுதடைவதாகவும் ஆனால் நாம் புதுப்பிப்பது 2000 முதல் 2500 கி.மீ தான் என்றும் இதனால் புதுப்பிக்க வேண்டிய தண்டவாளங்களின் தூரம் ஏராளமாக நிலுவையில் உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் விபத்துகளுக்கு வழி வகுக்கலாம். தண்டவாளம் தடம் புரண்டு இந்த விபத்துக்கள் நிகழலாம் என்று கூறினார். இவ்வாறு குறைவான தண்டவாளங்கள் புதுப்பிப்பது நிதி பற்றாக்குறையின் காரணமாகத் தான்’ என்று அவர் அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

 

அதேபோல ரயில்வே அமைத்த டாஸ்க் போர்ஸ் என்ற அதிகாரிகளின் கமிட்டி சிக்னல் ஆண்டுதோறும் 200 ரயில் நிலையங்களில் பழுதடைவதாகவும் ஆனால் நூறு தான் புதுப்பிக்கப்படுவதாகவும் அதிலும் ஏராளமான நிலுவை உள்ளதாகவும் அது அறிவித்தது. தலைமை கணக்காயர் தனது ஒரு அறிக்கையில் இந்த பாதுகாப்பு சம்பந்தமான சொத்துக்களை புதுப்பித்தல் வேலைக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பு நிதி திட்டமிட்டபடி செலவு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார். தண்டவாளம் பழுதடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் தடம் புரளலாம் என்கிற நிலையில் உள்ளன. அதேபோல ஏராளமான சிக்னல்கள் புதுப்பிக்கப்படாமல் கிடக்கின்றன. ரயில்வேயின் லட்சியமாக கூறப்படுவது என்னவென்றால் வேகமான பாதுகாப்பான கட்டுப்படியான விலையிலான ரயில் பயணம் என்பதுதான் லட்சியம். ஆனால் பாதுகாப்பான ரயில்கள் ஓடுவதற்கு ரயில்வேயும் மத்திய அரசும் ஒரு அவசர உணர்வுடன் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறேன்.

 

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகள் மீதோ சரக்கு ரயில் மீதோ மோதுவதை தவிர்க்கும் வகையில் மோதல் தடுப்பு கருவி அந்த இன்ஜினில் பொருத்தி இருந்தால் அந்த என்ஜின் இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த கருவி இந்த வண்டியில் பொருத்தப்படவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் (31-3-2022) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த மோதல் தவிர்ப்பு கருவியை ‘கவச்’ என்ற பெயரில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார்கள். அந்த அறிக்கையின் படி 2022-ல் 65 என்ஜின்களில் தான் அது பொருத்தப்பட்டிருந்தது. டீசல் இன்ஜின்கள் 4800 மின்சார எஞ்சின்கள் 8400 ஆக மொத்தம் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட என்ஜின்கள் இருக்க 65 இன்ஜின்களில் மட்டும் இது பொருத்தப்பட்டது என்பது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும். எனவே இந்த விபத்துக்கு மத்திய அரசு தான் காரணம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பரபரப்பு கடிதம்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
letter of retired IAS, IPS officers to Election Commissioner
தலைமை தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என 87 பேர் சார்பில் கூட்டாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 ஆவது பிரிவின்படி வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் இத்தககைய செயல் அராஜகத்தில் முடியும். இது தேர்தல் நேரத்தில் பெரும் குழப்பங்களை விளைவிக்கும்.

ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மத்திய அரசு பழிவாங்குவது தவறு. இது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.