நகைக்கடை ஊழியர்களைத் தாக்கி ரூ.4 லட்சத்தைப் பறிக்க முயன்ற வழக்கில், இரண்டு தலைமைக் காவலர்களை குற்றவாளிகள் என அறிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இருவரையும் மார்ச் 13-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
மதுரை நகைக்கடை ஒன்றில் இரு ஊழியர்கள் தங்களது கடைக்காக, சென்னையில் உள்ள சுரானா ஜுவல்லர்ஸில் நகை வாங்க 4 லட்ச ரூபாயுடன் சென்னை வந்தனர். அவர்களை வழிமறித்த மதுரை எஸ்.பி.சி.ஐ.டி. தலைமைக் காவலர் மீனாட்சிசுந்தரம் மற்றும் மதுரை திருமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரவாதிகள் என சந்தேகம் இருப்பதாகக் கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது நகைக்கடை ஊழியர்களைத் தாக்கியதுடன், பணம்பறிக்கவும் முயன்றதால், அவர்களிடமிருந்து தப்பிக்கவும், காப்பாற்றும்படியும் கூச்சலிட்டுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த யானைகவுனி காவல் நிலையத்தினர் அந்த ஆட்டோவை மடக்கி விசாரணை நடத்தியுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பின்னர், இந்த சம்பவத்தில் பாஸ்கர், ரவி, மாரிமுத்து, முத்துசரவணன், அனீஃபா, சவுகத் அலி உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், அந்த இருவர் உள்ளிட்ட 8 பேர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கடந்த 2005-ல் நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து 2008 நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இரு தலைமைக் காவலர்கள் தவிர மற்ற 6 பேர் சம்பவ இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக் கூறி, அந்த ஆறு பேர் விடுதலையை உறுதி செய்து உத்தரவிட்டார். ஆனால், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரு தலைமைக் காவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சாட்சியங்களுடன் உறுதி செய்யபட்டுள்ளதால், மீனாட்சிசுந்தரம், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும், அவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக, இருவரையும் மார்ச் 13-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.