ADVERTISEMENT

மதுரை மேம்பாலம் இடிந்து விபத்து... ஒருவர் உயிரிழப்பு!

05:59 PM Aug 28, 2021 | kalaimohan

ADVERTISEMENT

மதுரை நத்தம் சாலையில் மதுரை-செட்டிகுளம் இடையே 7.3 கிலோமீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணுக்கு இணைக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் சிக்கி காயமடைந்துள்ளனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் (45) என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத்துறை படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேம்பால இடிபாட்டில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் நேரில் ஆய்வு செய்துவருகிறார். அதேபோல் மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, தல்லாகுளம் உதவி ஆணையர் சுரக்குமார் ஆகியோரும் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்துவிழுந்த சம்பவம் அங்கு பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இறந்த ஆகாஷ் சிங்குடன் வேலை செய்த சூரஜ்குமார் நம்மிடம் கூறியபோது, ''அந்த பாலத்திற்கான இணைக்கும் கம்பிகளை இணைக்கும் போது ஜாக்கியை கழட்டினோம். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தை இணைக்கும் இரும்பு கம்பிகள் சரியாக பொருந்தாமல் சரிய தொடங்கியது. அப்போது நான் வெளியே இருந்ததால் பிழைத்தேன். பாலத்தின் மேல் நின்றிருந்த என் நண்பன் ஆகாஷ் என் கண்ணெதிரிலேயே மரணமடைந்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை'' என்று கதறி அழுதார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT