Advertisment

மதுரை மாநகராட்சி வார்டு மறுவரையறையில் குளறுபடி!- திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் பேட்டி!!

மதுரை மாநகராட்சியில் விதிகளை பின்பற்றாமல் அதிமுகவினருக்கு ஆதரவாக வார்டு வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த வரையறையை திரும்ப பெற்று, முறையாக வரையறை செய்தபின் தேர்தலை நடத்திட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து, ஆதாரங்களுடன் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் கூறியது...

எந்த ஒரு தொகுதியிலும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மக்கள்தொகை எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்க முடியாது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் 24 வார்டுகள் மக்கள் தொகையைவிட அதிகமான வாக்காளர் எண்ணிக்கையை கொண்டுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட 16 வார்டுகளில் ஒன்பதில் மக்கள் தொகையைவிட வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

madurai district municipal corporation dmk party mla press meet

Advertisment

மத்திய அரசின் மறு வரையறை சட்டம் 2003 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்களின்படி சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லைகள் மாற்றப்படக் கூடாது, அதாவது 2016- ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வாக்களித்த வாக்காளர் வேறொரு தொகுதிக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை மாற்றப்படக் கூடாது. மதுரை கிழக்கின் வாக்காளர்களாக இருந்த 38 ஆவது வார்டு மக்கள் சிலர் தற்போது மதுரை வடக்கின் வாக்காளர்களாக மாற்றப்படுகிறார்கள்.

எந்த ஒரு வார்டும் சட்டமன்ற தொகுதி எல்லைகள் மற்றும் இயற்கையான எல்லைகளைக் கடந்து அமைந்து இருக்க கூடாது எனத் தமிழ்நாடு நகராட்சி அமைப்புகள் விதிகள் எண் 7 தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது நடைபெற்றுள்ள வார்டு மறுவரையறையில், குறிப்பாகப் பல புதிய வார்டுகள் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கிடையே பரவி அமைந்திருப்பது மேற்கூறப்பட்டுள்ள சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகும்.

தமிழ்நாடு மறுவரையறை வாரிய சட்டம்- “வார்டுகளின் மக்கள் தொகை கூடுமானவரை சமமாக இருக்க வேண்டும்”தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் மறுவரையறை விதிகள்- “வார்டுகளில் மக்கள் தொகைக்கு இடையேயான வேறுபாடு +/-10 விழுக்காடு வரை மட்டுமே அனுமதிக்கலாம். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 61% வார்டுகள் அனுமதிக்கப்பட்ட வேறுபாட்டை மீறுவதாக உள்ளது, அதாவது 35 வார்டுகள் 10% வேறுபாடுகளை விட குறைவாகவும், 26 வார்டுகள் 10% வேறுபாடுகளை விட மிகுதியாகவும் உள்ளது.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50% வார்டுகளும் எந்த வார்டுகளிலெல்லாம் பெண்களின் விகிதம் அதிகமாக உள்ளதோ அதை பொறுத்தே வழங்கப்பட வேண்டும். 34 இடங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் அவர்களின் எண்ணிக்கை விகிதத்துக்கு பொருந்தாமல் அமைந்துள்ளது. பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 17 வார்டுகள் பொது வார்டு என தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல பொதுவாக வகைப்படுத்த வேண்டிய 17 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

வார்டு மறுவரையறை கட்சி பாகுபாடின்றி, எவருக்கும் வெற்றி வாய்ப்பை அதிகரிக்குமாறு அல்லாமல் நடுநிலையாக அமைய வேண்டும். ஆனால் மதுரை மாநகராட்சி தற்போது செய்துள்ள மறுவரையறை ஆளும் கட்சிக்கு சாதகமாக வார்டுகளின் எண்ணிக்கையில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. மதுரை மேற்கு தொகுதி மறுவரையறைக்கு முன்னர் 15 வார்டுகளை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் தற்போது 22 வார்டுகளாக உயந்துள்ளது. இதற்கு நேர்மாறாக எனது மதுரை மத்திய தொகுதி தற்போது 6 வார்டுகளை இழந்துள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் தொகுதியான மதுரை மேற்குத் தொகுதியில் உள்ள 55 சதவீத வார்டுகள் சராசரி வாக்காளர் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது. மறுவரையறை செய்யப்பட்டதில் உள்ள முரண்பாடுகளையும் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதையும், சட்ட விதிமுறைகளை சரியாகப் பின்பற்றி மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது என்றார்.

DMK MLA madurai municipal corporation ward issues
இதையும் படியுங்கள்
Subscribe