/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1942.jpg)
திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் சேட்டு(எ) இருதயராஜ், டிங்கி (எ) ஆரோக்கியராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோர் ஒரு வழக்கு விசாரணைக்காக கடந்த 2004ம் ஆண்டு திருச்சி நீதிமன்றத்திற்கு காரில் சென்றனர். அப்போது மணிகண்டம் அருகே மற்றொரு ரவுடி கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ராம்ஜிநகர் போலீசார் பிரபல ரவுடிகளான முட்டை ரவி, குணா(எ) குணசீலன், ஆனந்த் (எ) முனிஆனந்த், ஆசாரி(எ)ஏசுதாஸ், மாதவன், சுந்தரபாண்டி, தட்சிணாமூர்த்தி, முருகன்(எ)துரைமுருகன், ஜெயக்குமார், மனோகரன், ரவி(எ)குட்ஷெட் ரவி, கமல்(எ)தண்டாயுதபாணிஆகிய 12 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இடைப்பட்ட காலத்தில், பிரபல முட்டை ரவி என்கவுன்டர் செய்யப்பட்டார். முனிஆனந்த், ஜெயக்குமார் ஆகியோர் இறந்தனர். இவ்வழக்கில் கடந்த 2019ல் தீர்ப்பளித்த நீதிமன்றம், குணா, சுந்தரபாண்டி, முருகன், மனோகரன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. மற்றவர்களை விடுவித்தது.
தண்டனையை எதிர்த்து 4 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். இந்த மேல் முறையீடு மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், கொடூரமான முறையில் சைக்கோவைப் போல கொலை செய்துள்ளனர். இவர்கள் தரப்பினர் பெரிய அளவில் ரவுடியிசம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதை மற்ற சாதாரண கொலையைப் போல பார்க்க கூடாது. சம்பவ இடத்தில் சிந்திக் கிடந்த ‘0’ பாசிட்டிவ் ரத்தமும் உறுதி செய்யப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஆயுள் தண்டனை வழங்கியது சரிதான் என்பதால், அந்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)