மதுரை ஆதீனம் திருச்சி நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தன்னை திட்டமிட்டு கொலை செய்யச் சிலர் எச்சரித்து  இருப்பதாகவும், குல்லா அணிந்த நபர்கள் தன்னை கொலை செய்வதற்கு முற்பட்டு தன்னை தாக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதாவது சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டபோது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இந்த தகவலைத் தெரியப்படுத்தி இருந்தார். அதோடு அவரது ஓட்டுநரும் குல்லா அணிந்த நபர்கள் தங்களைத் தாக்கி கொலை செய்ய முற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த பேச்சு குறித்து சென்னை அயனாபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இந்த வழக்கானது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த புகாரின் பேரில் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இருவேறு சமூகத்திற்கிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்படுதல், பொதுத் தூய்மைக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனத்திற்குச் சம்மன் அனுப்பப்பட்டு ஜூன் 30ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் மதுரை ஆதீனம் அன்றைய தினம் ஆஜராகாத நிலையில் ஜூலை 5ஆம் தேதி ஆஜராக வேண்டும் என  சைபர் கிரைம் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது. அதற்கு மதுரை ஆதீனம் சார்பில் காணொலி மூலமாக ஆஜராக அனுமதிக்க கோரி காவல்துறைக்குக் கடிதம் அளிக்கப்பட்டது. அதில் வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி வீடியோ கான்பரன்ஸ் மூலமாகத் தான் ஆஜராக இருப்பதாக மதுரை ஆதீனம் தரப்பு தெரிவித்திருந்தது.

அதற்கு சைபர் கிரைம் போலீசார் அனுமதி மறுத்து, நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மதுரை ஆதினம் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தான் எந்த ஒரு உள்நோக்கதோடும் பேசவில்லை. ஆனால் உள்நோகத்தோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார். இந்த மனு  நீதிபதி கார்த்திகேயன் அமர்வில் ஜூலை 14ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.