Madurai AIIMS; Tamil Nadu Govt

தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தற்போது தமிழக அரசு வழங்கியுள்ளது.

Advertisment

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ள நிலையில் அதற்கான கட்டுமான பணிகள் பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் இருந்தது. தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எல்&டி கட்டுமான நிறுவனம் சார்பாக ஒப்பந்தம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து வாஸ்து பூஜைகள் நடத்தப்பட்டு கட்டுமான பணிகள் 33 மாதங்களில் முடிக்கப்படும் எனத்தகவல் வெளியாகியது.

Advertisment

95 படுக்கைகளுடன் 10 தளங்கள் கொண்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியதாக எய்ம்ஸ் நிறுவனம் சார்பாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படாமல் பணி தொடங்கியதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தது. இதற்கு எய்ம்ஸ் சார்பில் இது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி அல்ல கட்டுமான பணிமேற்கொள்வதற்கான பொருட்களை வைப்பதற்கான கட்டுமான பணி எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. கொடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.