Skip to main content

சென்னை மாநகராட்சி நடவடிக்கைகள் - நீதிபதி வேதனை

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
ch

 

சென்னை ஷெனாய் நகரில்  தன் வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி லட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, "சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி இருந்தார். மாநகராட்சி எல்லைக்குள் சட்டவிரோத கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பட்டியலிட்டார். மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க மாநகராட்சி எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது சென்னை மக்களை விரக்தி அடைய செய்துள்ளதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். 

 

இதில் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய நீதிபதி, மாநகராட்சி எல்லைக்குள் விதிகளை பின்பற்றி கட்டிட ஒப்புதல்கள் வழங்கப்படுகிறதா? சட்ட விரோத கட்டுமானங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பதிலளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

 

மேலும் ஊழல் மீதான  நடவடிக்கைகள் மலிந்து விட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, ஊழல் நடவடிக்ககளில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மாநகராட்சி அதிகாரிகள் சொத்து விவரங்கள், ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு பிரிவின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு  உத்தரவிட்டார்.

 

லஞ்சம் கொடுக்காமல் கட்டிட ஒப்புதல் உள்ளிட்ட எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதாக லோக் அதாலத் ஆய்வு கூட்டத்தில்  உத்தரவாதம் அளித்தும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்காத அதிகாரிகள் மீது மாநகராட்சி ஆணையர் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளார்  என்பது குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27 ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்

சார்ந்த செய்திகள்