Machinery in Subsidy to Fishermen Government of Tamil Nadu

பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40 சதவீதம் மானியத்தில் வெளிப்பொருத்தும் மற்றும் உட்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்பட்டு வந்தது. அதே சமயம் இத்திட்டம் நீலப்புரட்சி திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பட யோஜனா திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

Advertisment

இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி (18.08.2023) இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் ஆயிரம் நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 சதவீதம் மானியத்தில் வெளிப்பொருத்தும் மற்றும் உட்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.

Advertisment

இந்நிலையில் இந்த அறிவிப்பின்படி பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு உதவிடும் பொருட்டு 2023 - 24 ஆம் நிதியாண்டில் மாநில அரசு நிதியின் கீழ் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஆயிரம் எண்ணிக்கையிலான 28 குதிரைத் திறனுக்கு (HP) குறைவான இயந்திர சக்தியுடைய வெளிப்பொருத்தும் மற்றும் உட்பொருத்தும் இயந்திரங்களை, இயந்திரம் ஒன்றின் விலை ரூ 1.20 இலட்சம் என்ற அடிப்படையில் 40 விழுக்காடு மானியத்தில் வழங்கிட நிர்வாக ஒப்புதலும், மானியத் தொகையாக மொத்தம் ரூ.4.80 கோடி நிதி ஒப்பளிப்பும் அளித்து தமிழக அரசு கடந்த 21 ஆம் தேதி (21.09.2023) அரசாணை வெளியிட்டுள்ளது எனக் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.