Skip to main content

பரபரப்பை ஏற்படுத்திய சிறைக்கைதிகளின்  சொகுசு வாழ்க்கை படங்கள் -  மத்திய சிறைகளில் அதிரடி சோதனை

Published on 16/09/2018 | Edited on 16/09/2018
pu

 

தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.  இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


 
கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி இருக்கிறது. சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

 

puthu


 
சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து  சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதனிடையே புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புழல் சிறையில் இருந்து ஜுட் விட்ட பெண் கைதி; வார்டன்கள் சஸ்பெண்ட்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
A female prisoner escaped from Puzhal Jail; Wardens suspended

இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்ட சிறையாக கருதப்படும் புழல் சிறையில் இருந்தே பெண் கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெரிய சுற்றுச்சுவர்கள், போலீஸ் பாதுகாப்பு, சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு என பல்வேறு வசதிகளைக் கொண்டது புழல் சிறை. சிறையின் நுழைவாயில் பகுதியிலேயே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு என பல்வேறு கட்டுப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெண் கைதி ஒருவர் புழல் சிறையில் இருந்து தப்பி சென்றுள்ளது புழல் சிறை வட்டாரத்தையே கலங்கடிக்க செய்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் வீடுகளில் புகுந்து திருடிய புகாரில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். அரும்பாக்கம் சூளைமேடு பகுதியில் வீட்டில் திருட முயன்றபோது சூளைமேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெயந்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், பெண்கள் சிறையில் இருந்த ஜெயந்தி புதன்கிழமை காலை சிறையில் இருந்து தப்பியது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சிறை வார்டன்ங்கள்  கோகிலா, கனகலட்சுமி ஆகிய இருவரை புழல் சிறை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், பெண் கைதிகளுக்கான பார்வையாளர் அறையில் உள்ள கதவு வழியாக ஜெயந்தி தப்பியது தெரியவந்துள்ளது .தொடர்ந்து ஜெயந்தியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

சிறையில் இருந்த கைதியை மூன்று ஆண்டுகளாக வெளியில் தேடிய போலீசார்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
 The police searched for the prisoner outside the jail for three years

திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிறையில் இருக்கும் நிலையில், அவரை மற்றொரு வழக்கில் போலீசார் மூன்று ஆண்டுகளாக வெளியில் தேடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அரும்பாக்கம் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்து ஆறு லட்சம் ரூபாய் திருடிய வழக்கு ஒன்றில், சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை அரும்பாக்கம் காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர். அதே நேரத்தில் வேறொரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட விக்னேஷை திருமுல்லைவாயில் போலீசார் கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து புழல் சிறையில் குற்றவாளி விக்னேஷ் அடைக்கப்பட்டு இருந்தார். ஆனால் இந்த தகவல் தெரியாத அரும்பாக்கம் போலீசார் பல இடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக விக்னேஷை தேடி வந்தனர். அண்மையில் புழல் சிறையில் உள்ள கைதிகளின் கைரேகைகளை கணினியில் பதிவேற்றம் செய்து புதுப்பித்தது சிறைத்துறை. அந்த கைரேகையில் விக்னேஷின் கைரேகை இருப்பது கண்ட அரும்பாக்கம் போலீசார் அதிர்ந்தனர். அப்பொழுதுதான் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வரும் இளைஞர் விக்னேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போலீசாருக்கே தெரியவந்தது. உடனே புழல் சிறைக்கு சென்ற போலீசார் விக்னேஷை மீண்டும் திருட்டு வழக்கில் கைது செய்தனர்.