
நடிகர் விஜய், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தது. நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது. இதை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
இந்த வழக்கு இன்று (27.07.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பு முன்வைத்த வாதத்தில், “நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை. நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மற்றவர்களைப் போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது. மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்காத நிலையில், தன்னை மட்டும் விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்குத் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.