
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு. மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுகளை நடத்திவருகிறார். பொதுவாக, ஆய்வுக் கூட்டங்களுக்காக தலைமைச் செயலாளர் மாவட்டங்களுக்குச் செல்லும்போது, அவருக்காக காலை டிஃபன், மதியம் லன்ச், இரவு டின்னர் என தடபுடல் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்வதுண்டு. இதற்கான செலவுகள் அரசு கணக்கில் சேர்ந்துவிடும்.
இந்த நிலையில், அதிகாரிகளுக்கான அநாவசிய செலவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு. இதன் ஒருபகுதியாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு நேற்று (09.06.2021) ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "எனது விசிட்டின்போது எனக்காகப் பெரிய அளவிலான தடபுடல் ஏற்பாடுகள் கூடாது. காலை உணவு மிக சிம்பிளாக இருக்க வேண்டும். அதேபோல, இரண்டு காய்கறிகளுடன் சைவ சாப்பாடு போதுமானது. இதைத்தவிர, ஆடம்பர ஏற்பாடுகள் எதுவும் இருக்கக் கூடாது" என்று அறிவுறுத்தியுள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு.
உயரதிகாரிகளின் வருகையின்போது சாப்பாட்டிற்காகவே ஏகப்பட்ட செலவுகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்துவந்த நிலையில், இறையன்புவின் உத்தரவினால் செலவுகள் குறையும் என்கிறார்கள் அரசுப் பணியாளர்கள்.