“வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது” - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Lower atmospheric circulation prevails Met Dept informs

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று (06.12.2024) வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (06.12.2024) பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, 07ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு இசையில் நகர்ந்து, 12ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். எனவே (06.12.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (07-12-2024) முதல் 10ஆம் தேதி (10.12.2024) வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

11ஆ,ம் தேதி (11.12.2024) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 12ஆம் தேதி (12.12.2024) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

weather
இதையும் படியுங்கள்
Subscribe