
கடந்த ஓராண்டாகவே கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது வீட்டு உபயோகத்திற்குப் பயன்படும் சமையல் சிலிண்டரின் விலை 25 ரூபாய் அதிகரித்து 900 ரூபாயைக் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு உபயோகச் சிலிண்டரின் விலை 875 ரூபாயிலிருந்து உயர்ந்து 900.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை ரூபாய் 75 உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை 1,831 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் சிலிண்டரின் விலை 285 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலையும், டீசல் விலையும் குறைந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகளும், டீசல் லிட்டருக்கு 14 காசுகளும் குறைந்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் 99.08 ரூபாய்க்கும், டீசல் 93.38 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.