ar

Advertisment

திருத்துறைப்பூண்டி அருகே நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திவிட்டு தப்பிய முன்னாள் காதலனால் பரபரப்பு உண்டாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடுபலம் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் விவசாய தொழிலாளி. இவரது மகள் அரவிந்தியா (வயது 22) ஆசிரியர் பட்டபடிப்பு படித்துள்ளார். இவருக்கு 15 தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சிங்காளந்தியை சோ்ந்த முத்தரசன் (வயது 22 ), ரவிச்சந்திரன் வீட்டிற்குள் புகுந்து அவரது மகள் அரவிந்தியாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க முயன்ற அவரது தாய் அம்சவல்லியையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அரவிந்தியா திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில்ம்அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த அம்சவள்ளிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இச்சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான முத்தரசனை தேடி வருகின்றனர். " முத்தரசன் அரவிந்தியாவை பள்ளியில் படிக்கும் போது காதலித்தாகவும், அரவிந்தியா அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றி வேறு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது." என்கிறார்கள் அந்த கிராமவாசிகள்.

முத்தரசன் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு அவன் மீது பல வழக்குகள் ஏற்கனவே உள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.