Love marriage newlywed incident in krishnagiri

Advertisment

கிருஷ்ணகிரி அருகே, காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை துரத்தித்துரத்திச்சென்று கத்தியால் குத்தி ஆணவக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரி ஏனுசோனை பி.கொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவருடைய மகன் சந்தோஷ் (23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நல்லாரப்பள்ளியில் உள்ள இரும்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

சந்தோசுக்கு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மீனா என்பவருடன் திருமணம் நடந்தது. ஜூன் 4ம் தேதி இரவு 7 மணியளவில், தியாகரசன்பள்ளி & பி.கொத்தப்பள்ளி சாலையில் சந்தோஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்தனர். அவர்களைப் பார்த்ததும் கலக்கமடைந்த சந்தோஷ், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை மர்ம நபர்கள் விடாமல் துரத்திச் சென்றனர். ஒரு கட்டத்தில் சந்தோஷ், ராஜம்மாள் என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்புக்குள் புகுந்து கொண்டார்.

Advertisment

அப்போதும் விடாமல் துரத்திச் சென்ற மர்ம நபர்கள், அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். இதில், அவர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்காக சடலத்தை, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. சந்தோஷூம், அவருடைய மனைவி மீனாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு மீனாவின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. குறிப்பாக, மீனாவின் அண்ணன் முருகேஷ் (25), தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் கூட சந்தோஷை பலமுறை எச்சரித்து வந்திருப்பது தெரிய வந்தது.

மீனாவின் அண்ணன் முருகேஷ், அவருடைய நண்பர்கள் காந்தி நகரைச் சேர்ந்த குமார் (24) மற்றும் 18 வயது உடைய ஒரு சிறுவன் ஆகிய மூவரும் சேர்ந்துதான் சந்தோஷை சாதிய வெறியுடன் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.