Skip to main content

காதல் விவகாரம்: அறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்ட இளைஞர்கள்!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

Love affair, youth were tortured

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பிரபல ஜவுளி கடையில் கடலூரைச் சேர்ந்த ஐந்து பட்டியலின இளைஞர்கள் பணியாற்றிவந்துள்ளனர். இவர்களில் ராஜேஷ் குமார் என்ற இளைஞர் திருப்பூர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய வடமாநில பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகியுள்ளார். அந்த நிறுவன உரிமையாளர், ராஜேஷ் குமார் பணியாற்றிய நிறுவன உரிமையாளரிடம் விவரத்தைக் கூறி விசாரிக்கச் சொன்னதாக தெரிகிறது.

 

இதையடுத்து காதல் தம்பதிகள் இருக்கும் இடத்தைக் கேட்டு ராஜேஷ் குமாருடன் பணிபுரிந்த கடலூரைச் சேர்ந்த பூவரசன், வள்ளரசு, முத்துக்குமார் உள்ளிட்டோரை ஜவுளி நிறுவன நிர்வாகிகள் ஆறு பேர் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. ஒருநாள் இரவு, பகலாக அறையில் அடைத்து, நிர்வாணப்படுத்தி, கால்களைக் கட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பிய நால்வரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து பெருந்துறை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

 

இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் ஜவுளி நிறுவனத்தைச் சேர்ந்த வேல்முருகன், பிரசாந்த், செந்தில், நந்தா, தமிழ் மற்றும் சதீஷ் ஆகிய ஆறு பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அந்த ஆறு பேரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பெருந்துறை பேருந்து நிலையம் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.