விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் பகுதியைச் சேர்ந்த சிங்கேஸ்வரன் என்ற இளைஞரும், கண்மாய் சூரன்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் இளம்பெண்ணின் மாமா விஜய் என்பவர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அதோடு இந்த காதலை கை விடுமாறு சிங்கேஸ்வரனிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் தங்களது காதலைக் கைவிட மறுத்துள்ளனர். 

இதனையடுத்து சிங்கேஸ்வரனையும், அவரது நண்பரான சங்கரேஸ்வரனையும் நேரில் அழைத்து இந்த காதல் விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நேற்று (08.07.2025) விஜய் அழைத்திருக்கிறார். இவரது பேச்சைக் கேட்டு சிங்கேஸ்வரனும், சங்கரேஸ்வரனும் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் தான் காதலுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த விஜய் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இருவரையும் சுற்றி வளைத்து கொலை செய்வதற்காக ஆயுதங்களைக் கையில் எடுத்துள்ளார். 

அப்போது தங்களைக் கொலை செய்ய முற்படுகிறார்கள் என்பதை அறிந்து சிங்கேஸ்வரனும், சங்கரேஸ்வரனும் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். இருப்பினும் அந்த கும்பலானது சங்கேஸ்வரனை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதாவது அந்த கும்பலானது இவர்கள் இருவரையும் விரட்டுவதும், சிங்கேஸ்வரனை வெட்ட முயன்ற போது தான் அவரது நண்பரான சங்கரேஸ்வரன் தடுக்க முயல்கிறார். அப்போது தான் இந்த கும்பலானது சங்கேஸ்வரனை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். அதன் பின்னர் சங்கர் உட்பட அனைவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 

இந்த கொலை சம்பவத்திற்கு முன்னதாக இருவரை விரட்டி சென்று கொலை செய்த காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த சம்பவத்தில் முதல் கட்டமாகக் காவல்துறையினர் 3 பேரைக் கைது செய்துள்ளனர். அதே சமயம் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இருவரைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.