/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4952.jpg)
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷால். லாரி ஓட்டுநர். இவர் கடந்த 5ம் தேதி குஜராத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கண்ணாடி தொழிற்சாலைக்கு வேதிப்பொருட்கள் நிரப்பிய லாரியை ஓட்டி வந்தார். இந்த நிலையில் தொழிற்சாலையில் வேதிப்பொருட்களை சேர்த்துவிட்டு மீண்டும் குஜராத்தை நோக்கி புறப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்பதூரில் இருந்து வெளிவட்ட சாலையில் இவர் தனது லாரியை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆவடியை அடுத்த நெமிலிச்சேரி அருகே பாலவேடு சுங்கச்சாவடி முன்பாக வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரியின் இடது பக்க டயர் வாகனத்திலிருந்து கழன்று ஓடியுள்ளது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் விஷால், வாகனத்தினை விபத்து ஏதும் ஏற்படாமல் லாவகமாக சுங்கச்சாவடி முன்னால் ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார்.
இந்த விபத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சி.சி.டி.வி. காட்சியில், லாரியின் டயர் கழன்று வேகமாக வருகிறது. அப்போது சாலை ஓரமாக இரண்டு பெண்கள் மற்றும் ஒரு நபர் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு நடுவில் சென்று நடைபாதை மீது மோதி காற்றில் காகிதம் பரப்பது போல் டயர் பறந்து செல்கிறது. இதில் இரண்டு பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து பறந்து சென்ற டயர் அருகில் இருந்த மற்றொரு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியிலிருந்து டயர் கழன்று வந்து மோதி விபத்து ஏற்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)