கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியிலிருந்து சென்னை நோக்கி அதிக எடை கொண்ட கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியானது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்ட அடுத்த வெட்டுவானம் என்ற பகுதியில் நேற்று (19.05.2025) நள்ளிரவு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் சேஸ் உடைந்து பிரேக் டவுன் ஆனது. இதனால் லாரி சாலையின் நடுவே பழுதாகி நின்றது. இதன் காரணமாக அந்த பகுதியுள்ள சர்வீஸ் சாலையில் மட்டுமே வாகனங்கள் செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
லாரி பாதியிலேயே பழுதாகி நின்றதால், மாற்று வழியில் செல்ல முடியாத வாகனங்கள் வெட்டுவனத்திலிருந்து சுமார் அகரஞ்சேறு வரைக்கும் என 5 கிலோமீட்டருக்கும் மேல் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. அதே சமயம் இன்று (20.05.2025) காலை முதல் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்குவதற்காக பள்ளிகொண்டா காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மறுபுறம் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரத்திற்குச் சென்னையிலிருந்து செல்லும் வாகனங்களையும், அதன் பிறகு சிறிது நேரத்திற்குப் பெங்களூரிலிருந்து செல்லும் வாகனங்களையும் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் உள்ளூர் வாகனங்களைப் பொறுத்தவரைக்கும் மாதனூரிலிருந்து ஒடுக்கத்தூர் வழியாகவும், அதேபோன்று மாதனூரிலிருந்து உள்ளி குடியாத்தம் வழியாகவும் மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் லாரி பழுதான காரணத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக் கடந்த சில மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் காவல்துறையினர் மற்றும் துங்கச்சாவடி துறையினர் ராட்சத கிரேன்களை கொண்டு லாரியில் உள்ள அதிக பாரம் கொண்ட கல் மற்றும் லாரியை அங்கிருந்து அகற்றுவதற்கான பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக வெட்டுவானம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அதிக விபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக, சென்னை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 43 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.