
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே லாரியில் அதிக பாரம் ஏற்றி சென்றதன் காரணமாக போலீசார் அபராதம் விதித்ததால் ஓட்டுநர் லாரியை பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்ற நிலையில் லாரி ஓட்டுநரை லாரியின் உரிமையாளர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திண்டுக்கல்லை சேர்ந்த மதுரை வீரன் என்பவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில் தென்னை மட்டை பாரத்தை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்த போது மழை பொழிந்து கொண்டிருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தென்னைமட்டை லோடை கொண்டு சேர்க்க முடியாமல் இருந்துள்ளது. அதேபோல் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றப்பட்டதாக போலீசார் வாகன சோதனையிலும் லாரியுடன் ஓட்டுநர் மதுரை வீரன் சிக்கியுள்ளார்.
இதனால் போலீசார் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனால் பயந்து லாரி ஓட்டுநர் மதுரை வீரன் பெட்ரோல் பங்க் ஒன்றில் லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார். அதேநேரம் சரக்கு ஏற்றிச் சென்று தங்களுடைய லாரி காணாமல் போனதாக பல்வேறு இடங்களில் லாரி உரிமையாளர் லாரியை தேடி உள்ளார்.
இந்நிலையில் ஓட்டுநர் மதுரை வீரன் லாரி உரிமையாளரிடம் சிக்கிய நிலையில் அவரை லாரி உரிமையாளர் தென்னை மட்டையால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலான நிலையில் லாரி ஓட்டுநரை தாக்கிய லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.