/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/34_122.jpg)
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு(44). இவர் காமராஜர் துறைமுகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். திருமணமான பிரபுவிற்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இன்று காமராஜர் துறைமுகத்தில் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு தமது இரு சக்கர வாகனத்தில் பிரபு வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அத்திப்பட்டு புதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது அடையாளம் தெரியாத லாரி மோதிய விபத்தில் பிரபு உடல் நசுக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரியை கண்டுபிடித்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக காமராஜர் துறைமுகம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)