சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம், நவம்பர் 30- ம் தேதியுடன் முடிவடைவதால், பணி நீட்டிப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல், கடந்த 2018 நவம்பர் 30-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தலைவராக கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டார். இருப்பினும், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை ஓராண்டு காலத்துக்கு நியமித்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து வழக்குகளையும் அவர் விசாரிக்க உத்தரவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH2_1.jpg)
வரும் 30-ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், பணி நீட்டிப்பு வழங்கக் கோரி பொன். மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் தன்னைத் தவிர, மீதமுள்ள 70 அதிகாரிகள், 132 கான்ஸ்டபிள்கள் என, 202 பேரும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தனக்கு எதிராக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவிலுள்ள 66 அதிகாரிகள்தான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pon manickavel_1.jpg)
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள், காவலர்கள் என, 116 பேரை அவர்கள் சார்ந்த துறைக்கு திருப்பிய அனுப்பி விட்டு, தற்போது 85 அதிகாரிகள், 108 காவலர்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, 2018 ஆகஸ்ட் முதல் 2019 மே வரை முடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது விசாரணையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யும், டி.ஜி.பி.யும் தலையிடுவதாகவும், பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள பொன் மாணிக்கவேல், உயர் நீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையை முடிக்க அனுமதிக்கும் வகையில், தனக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us