
சென்னையில் யுகேஜி மாணவனைக் கடுமையாக தாக்கிய ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் அந்த பகுதியில் உள்ள 'டான்போஸ்கோ' எனும் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான். எல்கேஜி வகுப்புகளை கரோனா காரணமாக ஆன்லைனில் படித்துவிட்டு யுகேஜி வகுப்புக்கு நேரில் சென்று வந்துள்ளார் அந்த சிறுவன். அப்பொழுது தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை சரியாக உச்சரிக்கவில்லை என மாணவனை பிரின்சி, இண்டியனாவான், மோனோஃபெரர் ஆகிய மூன்று ஆசிரியர்கள் கடுமையாக திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். தொடர்ந்து பயத்தில் மாணவன் அழுகையை நிறுத்தாததால் பெற்றோர்கள் சிறுவனுக்கு ஆறுதல் கூறினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஜாமீனில் வெளி விடப்பட்டனர்.
அந்த வீடியோவில் ''எந்தந்த மிஸ் எல்லாம் உன்னை அடிச்சாங்க' என மாணவனின் தாயார் கேட்க, 'தமிழ் மிஸ், எல்லாம் மிஸ்சும் அடிச்சாங்க' என்றான் சிறுவன். 'நாம டிரீட்மென்ட் முடிச்சுட்டு எந்தெந்த மிஸ் உன் அடிச்சாங்கனு சொல்லு அவங்கள எல்லாம் போயி அடிச்சுட்டு வந்துடலாம். இங்க யாரும் வரமாட்டாங்க. மிஸ்லாம் இங்க வரமாட்டாங்க... அழக்கூடாது.. கண்ண தொறந்து பாரு நாம ஹாஸ்பிடல்ல இருக்கோம்'' என ஆறுதல் கூறினர்.