Skip to main content

''ஏதாவது கிறுக்கனா இருந்தா பாரு''- வாய்ஸ் நோட்டால் சிக்கிய மோசடி பெண்   

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

"Look if there is something wrong" - Fraudster caught by voice note

 

ஒரு லட்சம் ரூபாய் புரோக்கர் கமிஷன் கொடுத்து திருமணம் செய்துகொண்ட இளைஞர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டது தெரியவந்து மோசடி மனைவி, புரோக்கர் என பலர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோபிச்செட்டிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது.

 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் புரோக்கர் மூலம் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தனக்கு தெரிந்த சரிதா என்ற ஏழை பெண் இருப்பதாக அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார். இளைஞரும் அவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதில் 1,20,000 ரூபாயை புரோக்கராக செயல்பட்ட விஜயலட்சுமிக்கு கொடுத்துள்ளார். மீதி பணத்தை திருமணத்திற்கு செலவு செய்துள்ளார்.

 

மேலும் அந்த பெண் குறித்து இளைஞர் விசாரித்ததில் தனக்கு ஒரு அண்ணன் இருப்பதாகவும், அவர் கேரளாவில் வசித்து வருவதாகவும், தான் ஆதரவற்ற நிலையில் விடுதி ஒன்றில் தங்கி ஈரோட்டில் பேப்பர் கோன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் சரிதா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து  கடந்த மாதம் 22 ஆம் தேதி இளைஞரின் சொந்த ஊரான தாசப்பகவுண்டன்புதூரில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் உறவினர்கள் முன்னிலையில் சரிதாவை அந்த இளைஞர் திருமணம் செய்துகொண்டார்.

 

திருமணமாகி ஒரு சில நாட்களில் மனைவி சரிதாவின் செல்போனை எதேச்சையாக எடுத்து பார்த்துள்ளார் அந்த இளைஞர். அப்பொழுது பெரியம்மா என்ற பெயரில் போனில் சேவ் செய்யப்பட்டிருந்த விஜயலட்சுமிக்கு வாட்ஸப்பில் சரிதா அனுப்பியிருந்த வாய்ஸ் நோட்டை கேட்டு அதிர்ந்து போயுள்ளார் அந்த இளைஞர்.

 

"Look if there is something wrong" - Fraudster caught by voice note

 

அந்த வாய்ஸ் நோட் ஆடியோவில், ''அடுத்தவாரம் நீயா அழைச்சுட்டு போறமாதிரி வா... போயிட்டு வேற ஏதாவது கனெக்சன் இருக்குதா பாரு. கிறுக்கனா இருக்கனும். போயிட்டு இங்க ஒரு வாரத்துல வரமாதிரி. வேற ஏதாவது ஆளு இருந்தா பாரு. ஆனா இது மாதிரி விவரமா வேண்டாம்.. சும்மா வயசு எச்சா இருக்கிற மாதிரி பாரு. ரெண்டு நாள்ல எஸ்கேப் ஆகுற மாதிரி ஆளா பாரு. திரும்ப ஓடி வந்துருவேன். நா ஓடிப்போயிட்டேன்னா இந்த பையன் எதுனா பண்ணிக்கும். அதுவேற பயமா இருக்குது'' என பேசியுள்ளார். இதனைக்கேட்டு மனமுடைந்த அந்த இளைஞர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.  

 

இதுதொடர்பாக நண்பர்களிடம் அந்த இளைஞர் தெரிவித்த நிலையில் நண்பர்கள் ஆலோசனைப்படி தன் நண்பனுக்கும் திருமணம் செய்ய பெண் வேண்டும் என சரிதாவிடம் அந்த இளைஞர் கேட்டுள்ளார். அவரும் பெரியம்மா விஜயலட்சுமியிடம் தெரிவிக்க, விஜயலட்சுமி தன்னிடம் பெண் இருப்பதாககூறி 80 ஆயிரம் ரூபாய் கமிஷன் கேட்டு பெண்ணுடன் தாசப்பகவுண்டன்புதூர் வந்துள்ளார். அப்பொழுது சுற்றிவளைத்து பிடித்த அந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் அந்த மோசடி கும்பலை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். மூன்று பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முற்றுகைக்கு ரெடியான நிர்வாகி கைது; தொடரும் கீழ்பவானி வாய்க்கால் நீர் திறப்பு பேச்சுவார்த்தை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Executive arrested for siege; Negotiations on the opening of water by the Kilpawani canal continue

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.