
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையனிடமிருந்து 30 லட்சம் மதிப்புள்ள நகைகள், இரண்டு கார், இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருக்கோவிலூர் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்ளையனை மடக்கிப் பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், பல்வேறு ஊர்களின் நடத்தப்பட்ட கொள்ளை சம்பவங்கள் தெரிய வந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகில் உள்ளது வடகரை தாழனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் 46 வயது காமராஜ். இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். கிராமத்தில் நல்ல முறையில் விவசாயம் செய்து நல்ல பெயரோடு வாழ்ந்து வந்துள்ள காமராஜ், விவசாயத்தில் எவ்வளவு பாடுபட்டும் போதிய வருமானம் கிடைக்கவில்லை. மனைவி பிள்ளைகளை நன்றாகக் கவனித்துக் கொள்ள, பிள்ளைகளைப் படிக்க வைக்க, அதிக அளவு பணம் தேவைப்பட்டது என்பதாலும், ஆடம்பரமாகச் செலவு செய்யவும் நினைத்த காமராஜ் இந்த திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் கண்டாச்சிபுரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பகல் நேரத்தில் பெண் ஒருவர் தன் வீட்டுக்கு தண்ணீர் எடுப்பதற்காக நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரச் சென்றுள்ளார். அவர் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பி வருவதற்குள் அவரது வீட்டை நோட்டமிட்ட காமராஜ் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகையைத் திருடிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டார். இதையடுத்து கிராமப்புறங்களில் 100 நாள் வேலைக்குச் செல்லும் பயனாளிகளின் வீடுகளாகப் பார்த்து நோட்டமிட்டு பட்டப்பகலிலேயே அப்படிப்பட்ட பூட்டிய வீடுகளுக்குள் புகுந்து பீரோ போன்ற பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டிருந்த பணம் நகைகளைக் கொள்ளையடித்து வந்துள்ளார்.
இதேபோன்று திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம், திருப்பாலபந்தல், வடபொன்பரப்பி, சங்கராபுரம், கெடார், ஏழுசெம்பொன், திருவண்ணாமலை, உட்பட மாவட்டம் தாண்டி மாவட்டம் என பல்வேறு கிராமங்களிலும் கொள்ளையடித்து வந்துள்ளார். இவ்வளவு தூரம் கொள்ளையடிக்கும் இவர், போலீஸிடம் பிடிபடாமல் இருந்தது தான் பெரிய ஆச்சரியம். இப்படி கொள்ளையடித்த நகைகளை திருக்கோவிலூர், பண்ருட்டி, கண்டாச்சிபுரம், பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் அடகு வைத்தும் விற்பனை செய்தும் பணத்தைச் சேகரித்துள்ளார். அப்படி சேர்த்த பணத்தில் ஒரு டாட்டா சுமோ, ஒரு இண்டிகா கார், இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் விவசாயம் செய்ய நிலம் ஆடம்பரமான வீடு என தன் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தார். ‘பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்’ என்பது போல பலே திருடன் காமராஜை போலீஸார் தற்போது மடக்கிப் பிடித்துள்ளனர்.
போலீஸார் எப்படி பிடித்தார்கள் என்பது குறித்து விசாரித்தபோது, திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு காய்கறி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து அந்த வீட்டிலிருந்து 15 பவுன் நகையை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. அதேபோல் கடந்த 16ஆம் தேதி மணலூர்பேட்டை அருகிலுள்ள மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி வீட்டில் மர்ம நபர் புகுந்து 18 பவுன் நகையைக் கொள்ளை அடித்துச் சென்றதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இப்படி தொடர் கொள்ளை நடப்பதாகக் காவல் நிலையங்களுக்கு புகார்கள் வரவே இந்த தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அவரது உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, மணலூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் அசோக்குமார் சிவஜோதி அடங்கிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, தொடர் கொள்ளை ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே நடந்த கொலைகளின் போது அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில் திருக்கோவிலூர், சங்கராபுரம், சாலையில் உள்ள மணம்பூண்டி கூட்டு ரோடு பகுதியில் மேற்படி தனிப்படை போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி போலீஸார் விசாரணை செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்தவரின் பதில் முரண்பாடாக இருந்ததால் சந்தேகமடைந்த தனிப்படை போலீஸார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் போலீஸிடம் சிக்கியவர் தான் பல்வேறு தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த காமராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து காமராஜிடமிருந்து 30 லட்சம் மதிப்புள்ள 75 பவுன் நகை 25 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு கார், இரண்டு பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பல ஆண்டுகளாக காவல்துறையிடம் சிக்காமல் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டுவந்த காமராஜை போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர் கொள்ளையனைக் கைது செய்த போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்கக் பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர் கொள்ளையில் ஈடுபட்ட காமராஜ் கைது செய்யப்பட்டது திருக்கோவிலூர் பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.