ADVERTISEMENT

‘புரட்சிக் கலைஞர் புகழ் வாழ்க’ - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

11:49 PM Dec 28, 2023 | prabukumar@nak…

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-2023) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தைரியமான அரசியல் முடிவுகளை எடுத்தவர் விஜயகாந்த். அவர் நினைத்திருந்தால் எத்தனையோ பதவிகளுக்கு சென்றிருக்கலாம். கொள்கை முக்கியம் என்றவர்” எனத் தெரிவித்தார்.

விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “கேப்டன் விஜயகாந்த் சீரான உடல் நலத்துடன் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக நீடித்திருப்பார்” எனத் தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்திக்கையில், “புரட்சிக் கலைஞர் புகழ் வாழ்க” என உணர்ச்சிவசப்பட்டு முழங்கியது அங்கிருந்தவர்களை ஒரு கணம் நெகிழச் செய்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT