Skip to main content

மக்களவை தேர்தல்: சேலம் சரகத்தில் 3600 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

மக்களவை தேர்தலையொட்டி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3600 துப்பாக்கிள் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

 

salem

 

சொந்த பாதுகாப்புக்காக முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி இதர தனி நபர்களுக்கும் உரிமத்துடன் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல விலங்குகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள விவசாயிகள், மற்றும் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவன பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோருக்கும் துப்பாக்கிகள் வழங்கப்படுகின்றன.

 

 

பொதுவாகவே தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தனி நபர்களிடம் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்கள் மூலமாக துப்பாக்கிகள் பெறப்பட்டு விடும். அதன்படி, மக்களவை தேர்தலையொட்டி துப்பாக்கிகளை ஒப்படைக்கும்படி அதன் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

 

 

சேலம் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் 1432 பேருக்கும், மாநகர பகுதிகளில் 540 பேருக்கும் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம், மாநகர பகுதிகளில் இருந்து இதுவரை 1892 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இன்னும் 80 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு மீண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

 

நாமக்கல் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களில் 1002 பேர் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். இன்னும் 48 துப்பாக்கிகள் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டியுள்ளது. 

 

 

தர்மபுரி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள 484 பேரும் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துப்பாக்கி வைத்துள்ள 222 பேரில் ஒருவர் தவிர மற்றவர்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துவிட்டனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் இதுவரை 3600 துப்பாக்கிகள் காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்