lodge manager was stabbed

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள சிதம்பரம் பிள்ளை தெருவைச் சேர்ந்த சபரிநாதன்(26) ஒரு தனியார் விடுதியில் ( லாட்ஜ்) மேலாளராகப் பணி செய்து வருகிறார். அதே நகரில் உள்ள கவரை தெருவைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், சபரிநாதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் சபரிநாதன் தான் பணி செய்யும் விடுதி அருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் மற்றும் நண்பர்கள் ரவி, மூர்த்தி ,உட்பட 6 பேரும் சபரிநாதனை திட்டி கடுமையாகத் தாக்கியதோடு அவரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக்குத்து பட்ட சபரிநாதனை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அதன் பின் சபரிநாதன் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் மூர்த்தி ,கார்த்திக், பிரபு ,ராம்குமார், உட்பட 6 பேர்கள் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் சபரிநாதனை கத்தியால் குத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரையும் உடனடியாக கைது செய்யக்கோரி சபரிநாதன் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று (31.5.2022) மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி நகரக் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து சபரிநாதன் உறவினர்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால் கள்ளக்குறிச்சி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.