Skip to main content

திருட்டு வாகனம்; பொருட்படுத்தாத ஊழியர்; அலட்சியம் காட்டிய அரசு அலுவலகம்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

local transport office changed name stolen vehicle

 

திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை வேறு ஒருவர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்து  கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமுதராஜ்  என்பவருடைய இருசக்கர வாகனம் கடந்த மாதம் 9 ஆம் தேதி திருடப்பட்டுள்ளது. தனது வாகனம் திருடு போனது குறித்து அமுதராஜ் சென்னை குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையில் அமுதராஜிடம் இருந்து திருடப்பட்ட  இருசக்கர வாகனத்தை கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் வேறு ஒரு நபர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர். இது குறித்த தகவல் அமுதராஜுக்கு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் இருசக்கர வாகனத்திற்குரிய அனைத்து ஆவணங்களும் அமுதராஜியிடம் உள்ளது.  அப்படி இருக்கும்போது திருடப்பட்ட வாகனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அமீர் அப்பாஸ் என்பவரின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதை அறிந்து அமுதராஜ் அதிர்ச்சியடைந்தார்.

 

இதையடுத்து, அமுதராஜ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். அவரது புகாரையடுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் சென்னை குமரன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். 

 

அப்போது  வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வேலை செய்யும் இரண்டு பெண் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் அசல் ஆவணங்களைப் பார்க்காமல் அதன் ஜெராக்ஸ் நகல்களை மட்டும் வைத்து பெயர் மாற்றம் செய்து கொடுத்துள்ளனர் என்பது தெரிய வந்தது. மேலும் இந்தப் பெயர் மாற்றம் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகி மூலம் பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, அதன் அடிப்படையில் பெண் ஊழியர்கள் பெயர் மாற்றம் செய்து கொடுத்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து பணியில் அலட்சியமாக செயல்பட்ட அந்த இரண்டு பெண் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகர் சென்னையில் உள்ள போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்