Advertisment

உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அதிமுக... தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

Local elections; AIADMK files petition in High Court .. Election Commission ordered to respond

Advertisment

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தும் கோரிக்கை குறித்து செப்டம்பர் 29க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அக்டோபர் 16ஆம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,மாநிலம் முழுவதும் அல்லாமல் 9 மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எந்தக் காரணமும் இல்லை எனவும், சட்டமன்றத் தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது கள்ள ஓட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாகப் போய்விடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கில் ஆளுங்கட்சிஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதால், தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கவும், கரோனா விதிகளை அமல்படுத்த வலியுறுத்தியும் அதிமுகவின்இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14ஆம் தேதிதேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலுக்கு மத்திய அரசுப் பணியாளர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பிரச்சாரம் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும், பறக்கும் படைகளை அமைத்து பணப் பட்டுவாடாவை தடுப்பதுடன், தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்

Advertisment

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் 2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தற்போது 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை மனுவை மாநில தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமாறும், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இன்பதுரை தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, வெளிமாநில தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும், மத்திய காவல் படையைப் பணியமர்த்த வேண்டும், தேர்தலை முழுமையாக சிசிடிவி பதிவு செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மாநில தேர்தல் ஆணையத்திடம் செப்டம்பர் 14 அன்று மனு அளித்தும் பதிலளிக்கவில்லை என வாதிட்டார்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் அரசு பிளீடர் பி. முத்துக்குமார் ஆஜராகி, 14,900 வாக்குச்சாவடிகளுக்கும் பொது பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்துஉத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது அவசியம் என கருத்து தெரிவித்தனர். மேலும், மாநிலத்தில் பிரதான கட்சி என்ற முறையில் அதிமுக அளித்த கோரிக்கை மனுவைப் பரிசீலித்து, அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கையைமனுதாரருக்கு செப்டம்பர் 29க்குள் தெரிவிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

highcourt election commission admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe