Skip to main content

உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராமம்...தோல்வியுற்ற அரசு நிர்வாகம்...!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

நாடு முழுக்க குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமம் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு பட்டா உரிமை கேட்டு உள்ளாட்சி தேர்தலை மொத்தமாக புறக்கணித்து அரசுக்கான எதிர்ப்பை உறுதியோடு நின்று பதிவு செய்துள்ளது.

 

 local body election-village Non voting

 



ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புங்கார் ஊராட்சிக்குட்பட்டது 1வது வார்டு பகுதி. இங்குள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் சுஜில்குட்டை என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 120 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் வசிக்கும் மக்கள்  பவானிசாகர் அணையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்தேக்கத்தையொட்டியுள்ள பகுதி என்பதால் இது பொதுப்பணித்துறைக்கு சொந்தம் என கூறப்படுகிறது. ஆனால் இக்கிராமத்தில் உள்ள மக்கள் பல ஆண்டுகாலமாக வசித்து வருவதால் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக பல போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் இதுவரையிலும் பட்டா வழங்கப்படவில்லை. இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாகவும் சில தினங்களுக்கு ஒவ்வொருவர் வீடுகளுக்கு  முன்பு கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.

அதே போல் இந்த  1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.  இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் சுஜில்குட்டை கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த வார்டில் மட்டும் 228 வாக்காளர்கள் உள்ளனர்.  இந்த நிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர் என 3 பதவிகளுக்கு மட்டும்  சுஜில்குட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆனால்  கிராம மக்கள் யாரும் வாக்களிக்க செல்லாமல் தேர்தலை  புறக்கணித்ததோடு கிராமம் முழுக்க கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் இந்த வாக்குச்சாவடிக்குட்ட நந்திபுரம் என்கிற வனகிராமத்தில் உள்ள 26 வாக்காளர்கள் இங்கு கொண்டு வந்து  மாலை 5 மணிக்கு வாக்களிக்க வைத்தனர் அதிகாரிகள். இதன்காரணமாக இந்த வாக்குச்சாவடியில் 10 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. சுஜில்குட்டை கிராமத்தை சேர்ந்த வாக்காளர்கள் எவரும் வாக்களிக்காமல் முழுமையாக தேர்தலை புறக்கணித்ததால் மக்கள் உறுதி வெற்றி பெற்று அரசு நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்