Skip to main content

பஞ்சாயத்து மற்றும் யூனியன் தலைவர் தேர்தல் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்!- உறுதியளித்த மாநில தேர்தல் ஆணையம்!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  இதில், 515 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளில், தி.மு.க. கூட்டணி 271 பதவிகளையும், அ.தி.மு.க. கூட்டணி 240 பதவிளையும் பெற்றன. 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 2,356 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 2,199 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 512 இடங்களில் வெற்றிபெற்று ஜனவரி 6-ம் தேதி பதவியேற்றுள்ளனர்.

LOCAL BODY ELECTION VIDEO RECORDING CHENNAI HIGH COURT

இதன் அடுத்தகட்டமாக,  மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்; ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக மறைமுகத் தேர்தல் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மறைமுக தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால்,  இந்தத் தேர்தல் நடைமுறையை முழுமையாக வீடியோ பதிவு செய்யக்கோரி திமுக தரப்பில் அதன் சட்டப் பிரிவு செயலாளர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

அந்த மனுவில், மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, திமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதும், சான்றிதழ்கள் வழங்காமல், ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டதைப் போல, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலிலும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.
 

தேர்தல் புனிதத்தை உறுதி செய்ய இந்தத் தேர்தல் நடைமுறையை முழுமையாக ஆடியோவுடன் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். மேலும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் தவிர வேறு எவரையும் அனுமதிக்க கூடாது எனவும், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகளை அறிவிப்பதில் தாமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். வாக்களிக்க வரும் உறுப்பினர்கள் இங்க் போன்ற பொருட்கள் எதையும் எடுத்து வர அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைமுறைகள் முழுவதும் ஆடியோ இல்லாமல் வீடியோ பதிவு மட்டும் செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து விதிகளையும் பின்பற்றி, நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
 

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை திமுக சட்டப் பிரிவு செயலாளர் என்ற முறையில் தாக்கல் செய்துள்ளதால், இதனைப் பொது நல வழக்காகக் கருத முடியாது எனக் கூறி, வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்