சேலத்தில் திமுகவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அமோக வெற்றி! 

சேலம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 22 வயது இளம்பெண் சந்தித்த முதல் தேர்தலிலேயே, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் சுக்கம்பட்டி, பூவனூர் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 3- வது வார்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மோகன் மனைவி பிரீத்தி என்பவர் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். பிரீத்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. 22 வயதே ஆன பிரீத்தி, தொலைநிலைக் கல்வித்திட்டம் மூலம் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டார்.

local body election results salem district

இந்த வார்டு, சுழற்சி முறையில் இந்தமுறை பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டதால், தேர்தலில் போட்டியிடும் கனவில் இருந்த மோகன், தனது மனைவியை போட்டியிட வைத்தார். தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (ஜன. 2) எண்ணப்பட்டன. தேர்தல் முடிவு, மாலை 05.00 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இளம்பெண், பிரீத்தி 2204 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவைச் சேர்ந்த பூங்கோதை செல்வம் 1154 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். அதாவது, 1050 வாக்குகள் வித்தியாசத்தில் பிரீத்தி அமோக வெற்றி பெற்றார்.

தேர்தல் வெற்றி குறித்து பிரீத்தியிடம் கேட்டபோது, பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்து பழக்கம் இல்லை என்று ரொம்பவே கூச்சப்பட்டார். வெட்கத்தில் நெளிந்தார். கணவர் மோகன், ''இனிமேல் கவுன்சிலர் கூட்டங்களில் நீதானே பேசி ஆகணும்'' என்று சொல்லி, அவருக்கு தைரியமூட்டினார். இதையடுத்து பிரீத்தி நம்மிடம் பேசினார்.

local body election results salem district

''அயோத்தியாப்பட்டணம் 3- வது வார்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் நான் போட்டியிட வேண்டும் என்று கணவர் கூறினார். இதுதான் எனக்கு முதல் தேர்தல் அனுபவம். சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என் மாமனார், தீவிர திமுக தொண்டர். கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே அவர் திமுகவில் இருக்கிறார். கணவரும் தீவிர விசுவாசி. அவர்களுக்கு உள்ளூரில் உள்ள செல்வாக்கும், உதயசூரியன் சின்னமும்தான் வெற்றியை எளிதாக்கியது.

தூய்மை இந்தியா பற்றியும், இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லை என்பது போலவும் பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் நாங்கள் பிரச்சாரத்திற்கு சென்ற சுக்கம்பட்டி, பூவனூர் கிராமங்களில் இன்னும் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஏராளமாக இருக்கின்றன. எங்களிடமும் பொதுமக்கள் கழிப்பறை வசதி செய்து தரும்படிதான் கேட்டனர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக, ஆட்சியில் இருப்பவர்கள் எங்கள் பகுதிகளில் கழிப்பறை, சாக்கடை கால்வாய் வசதிகளைக்கூட முறையாக செய்யவில்லை. என் கவனமெல்லாம் எங்கள் கிராம மக்களுக்கு பொதுக்கழிப்பறை மட்டுமின்றி, வீடுகள்தோறும் தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுப்பதில்தான் இருக்கிறது,'' என்றார்.

local body election RESULTS 2020 salem district
இதையும் படியுங்கள்
Subscribe