Advertisment

தேர்தல் பிரச்சனை... தந்தையின் கழுத்தை நெரித்தவரின் காதை கடித்து துப்பிய மகன்!

local body election pudukkottai incident

Advertisment

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை (09.10.2021) நடந்தது. பல இடங்களில் இடைத்தேர்தல்களும் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில்தான் தனது ஆதரவாளருக்கு வாக்களிக்கவில்லை என்று கூறி தகராறு செய்து தாக்கியவரின் காதைக் கடித்து துப்பியுள்ளார் ஒரு இளைஞர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு ஊராட்சியில் சனிக்கிழமை இடைத்தேர்தல் நடந்தது. கீதா துரையரசன் (பூட்டுச்சாவி சின்னம்), ஜானகி செல்வராஜ் (ஆட்டோ சின்னம்). ஆகிய இருவரும் வேட்பாளராகப் போட்டியிட்டனர். சனிக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் 2,985 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை மாங்காடு உசிலங்கொல்லை பகுதியைச் சேர்ந்த ரெங்கையன் மகன் குமரேசன் (வயது 40) என்பவர் விடங்கர் கோயில் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அதே ஊரில் உள்ள சுந்தரகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விஜயசுந்தரம் (வயது 57) என்பவரிடம் “நீ ஆட்டோவுக்கு ஓட்டு போடாமல் பூட்டுச் சாவிக்கு ஏன் ஓட்டு போட்டாய்” என தகராறு செய்து, “ஆட்டோவுக்கு ஓட்டு போட்டிருந்தால் மாரியம்மன் கோயிலில் வந்து சத்தியம் செய்” என்று கூறி தகராறு செய்துள்ளார்.

Advertisment

தகராறு செய்ததுடன் விஜயசுந்தரம் கழுத்தையும், உயிர்நாடியையும் நெரித்தபோது தடுக்க வந்த விஜயசுந்தரம் மனைவி ராஜலெட்சுமி (வயது 50), மகன் சதீஷ் (வயதை 26) ஆகியோரையும் தாக்கியுள்ளார். தந்தையின் உயிர்நாடி கழுத்தை நெரிப்பதைப் பார்த்த மகன் சதீஷ் விலக்கிவிட முயன்றும் பயனளிக்காததால் குமரேசனின் காதைக் கடித்துத் துப்பியுள்ளார். தகராறு குறித்து அங்கு வந்த குமரேசன் தம்பி இளங்கதிருக்கும் காதில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காது துண்டான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு துண்டான காதை இணைத்து தையல் போட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். குமரேசன் தம்பி இளங்கதிரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அதேபோல கழுத்து மற்றும் உயிர்நாடியில் நெரித்ததால் காயமடைந்த விஜயசுந்தரம் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி ஆகியோர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சதீஷ் லேசான காயத்துடன் உள்ளார்.

சம்பவம் குறித்து குமரேசன் கொடுத்துள்ள புகாரில், விடங்கர் கோயில் பக்கம் எனது பூந்தோட்டத்திற்கு சென்றபோது வழிமறித்த விஜயசுந்தரம் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் வீடு கட்ட மணல் அள்ளியதை எப்படி காவல்துறையிடம் சொல்லலாம் என்று கூறி அடித்து காதை அறுத்துவிட்டதாக புகார் கொடுத்துள்ளார்.

அதேபோல விஜயசுந்தரம் கொடுத்த புகாரில், அவரது ஆதரவாளருக்கு ஓட்டு போடவில்லை என்று கூறி தன்னிடம் தகராறு செய்து கொலை செய்ய முன்றதால் அதனைத் தடுக்க வந்தவர்களையும் தாக்கினார். என்னைக் கொன்றுவிடுவாரோ என்று என் மகன் சதீஷ் குமரேசன் காதை கடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

போலீசார் விசாரணையில், குமரேசன் புகாரில் கூறியுள்ள பகுதியில் தோட்டம் இல்லை என்பதும் விஜயசுந்தரத்திடம் மணல் அள்ள மாட்டு வண்டியோ, வேறு வாகனங்களோ இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், விஜயசுந்தரத்திடம் தகராறு செய்யும் முன்பு இதேபோல ஓட்டு போட்டது குறித்து வேறு ஒருவருடன் தகராறு செய்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து வடகாடு போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். தேர்தல் பிரச்சனையில் காதைக் கடித்துத் துப்பிய பிரச்சனை பரபரப்பாக உள்ளது.

incident Police investigation PUDUKKOTTAI DISTRICT
இதையும் படியுங்கள்
Subscribe