Skip to main content

மதுரையில் களைகட்டிய ஊரக உள்ளாட்சி தேர்தல்...!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

மதுரை மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 27) நடைபெறவுள்ள முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வைகை ஆற்றின் வட புறம் அமைந்துள்ள மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் என ஆறு ஒன்றியங்கள் இடம் பெற்றுள்ளன.

 

local body election- madurai

 



இதில் கிழக்கு ஒன்றியத்தில் 199, மேற்கில் 131, மேலூர் 195, கொட்டாம்பட்டி 151, வாடிப்பட்டி 110, அலங்காநல்லூர் 153 என மொத்தம் 939 வாக்குச்சாவடி மையங்கள் 487 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டில் 181 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டில் ஆயிரத்து 555 பேரும், கிராம ஊராட்சி வார்டில் 8 ஆயிரத்து 169 பேரும், கிராம ஊராட்சி தலைவருக்கு 2 ஆயிரத்து 467 பேரும் என மொத்தம் 12 ஆயிரத்து 372 பேர் போட்டியிட மனுச் செய்துள்ளனர்.

முதல் கட்ட வாக்குப்பதிவில் பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 58 ஆயிரத்து 753 பேரும், ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 52 ஆயிரத்து 637 பேரும், இதர பிரிவினர் 13 பேரும் என மொத்தம் 5 லட்சத்து 11 ஆயிரத்து 403 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். அதே போன்று வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு நிலைகளில் உள்ள 7 ஆயிரத்து 648 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில் பதற்றமுள்ள பகுதிகள் என 119 இடங்களும் அவற்றிலுள்ள 231 வாக்குச்சாவடி மையங்களும் கண்டறியப்பட்டு, அப்பகுதியில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 20 உதவி கண்காணிப்பாளர்கள், 60 காவல் ஆய்வாளர்கள், 2 ஆயிரம் போலீசார் என கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 11, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 101, கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் 1506 (இவர்களில் 442 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்), ஊராட்சித் தலைவர்கள் 188 பேர் (இவர்களில் 8 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது) என மொத்தம் 1356 பதவிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.முதன்மை, நடுத்தரம், சிறியது என பல்வேறு வகையிலான வாக்குப்பெட்டிகள் 3 ஆயிரத்து 143 தேவையாக உள்ள நிலையில், 3 ஆயிரத்து 236 எண்ணிக்கையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

நான்கு வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கு மஞ்சள் நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பச்சை நிறத்திலும், கிராம ஊராட்சி கவுன்சிலர்களுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மதுரை ஒத்தக்கடையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி, திருப்பாலையில் அமைந்துள்ள யாதவா கல்லூரி, மேலூர் அரசு கலைக் கல்லூரி, கொட்டாம்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி, வாடிப்பட்டியிலுள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் எண்ணப்படவுள்ளன.

சார்ந்த செய்திகள்