/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/toll gate.jpg)
சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வர இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் வரி என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டுவதை போல, 20 வருடங்களுக்கு மேலான சுங்கச்சாவடிகளை பயன்பாட்டிலிருந்து எடுக்காமல் அல்லது கட்டணத்தையாவது குறைத்து வசூலிக்காமல் தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு சுங்கக்கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு வருமான நோக்கத்தோடு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
சுங்கக்கட்டணத்தை உயர்த்தினால் லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். சிறு, குறு தொழில்கள் அனைத்தும் முடங்கி, வேலைக்கு திண்டாடி கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற கட்டண உயர்வு சாமானியர்களை பெரிதும் பாதிக்கும் என்பதை மத்திய அரசு உணராதது வேதனையளிக்கிறது.
இந்த கட்டண உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஏழை எளிய மக்களுடைய வருமானத்தையும், குடும்ப பொருளாதாரத்தையும் உயர்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய மாநில அரசுகள் எதற்கெடுத்தாலும் வரி உயர்வு, கட்டண உயர்வு என்ற போர்வையில் அடித்தட்டு மக்களின் பணத்தை சுரண்டுவது மக்களுக்கான அரசுகளாக இருக்க முடியாது. எனவே ஏற்பட இருக்கும் பாதிப்பை உணர்ந்து அமலுக்கு வர இருக்கின்ற சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ’’
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)