திருச்சி சுந்தர்நகர் பகுதியில் உள்ள நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் சாந்தி. இந்த குழந்தைகள் காப்பகத்தில் வசித்து வந்த புலிவலத்தைச் சேர்ந்த 16 வயது பெண் குழந்தை மாயமானதாக மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ‘புலிவலம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவிக்கு அவருடைய தாய் திருணம் செய்துவைக்க ஏற்பாடு செய்வதை அறிந்து, சமூகநலத் துறை அதிகாரிகள் மூலம் அவர் மீட்கப்பட்ட அவர், நாகம்மையார் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் உதவியாளருடன் பள்ளிக்கு அழைத்த செல்லப்பட்டார். இதனிடையே அவர்கள் உணவருந்த சென்றபோது அவர்களிடம் இருந்து பிரிந்து சென்ற மாணவி மீண்டும் குழந்தைகள் காப்பகத்திற்குத்திரும்பவில்லை’ எனத்தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.