
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 5வது மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் வசித்துவரும் பொதுமக்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் கேம்புரோடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (22.02.2025) மாலை நடைபெற்றது. இந்த குறைதீர்ப்பு முகாமிற்குத் தமிழ்நாடு குறு சிறு நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கினார். இந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் மக்களின் பல்வேறு குறைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு மக்கள் மனுக்களை வரிசையில் நின்று அமைச்சரிடம் அளித்தனர். உடன் தாம்பரம் எம்.எல்.ஏ.,மேயர், துணை மேயர், 5வது மண்டல குழு தலைவர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.
அப்போது, “மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தனக்கு மூன்று சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்திருந்தார். அவர் மனுவைப் பெற்ற அமைச்சர் மேடையின் மேல் அந்த மாற்றுத்திறனாளியை சேரில் அமரவைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது நீண்ட நேரம் காத்திருந்த அந்த மாற்றுத்திறனாளி தனக்குத் துணையாக அழைத்து வரபட்டிருந்த அவரது மகளும் தந்தையின் அருகிலேயே காத்திருந்தார். அவரது மகள் பள்ளியில் இருந்து தனது சீருடையுடன் நீண்ட நேரம் தனது மாற்றுத்திறனாளி தந்தையுடன் பசியுடன் அமர்ந்திருந்த அந்த பள்ளி மாணவியை அருகில் அழைத்த தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் மேடை மீது மேசையில் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டியை எடுத்து அந்த மாணவிக்கு அளிக்க முற்பட்டார்.
அப்போது அதனைக் கவனித்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் உடனே, “என்ன சார் ஏன் சிற்றுண்டி எடுத்துட்டு எங்க போறிங்க?” என கேட்டார். அதற்கு அவர், “குழந்தை ரொம்ப நேரமா பசியோட இருக்குனு நினைக்கிறேன். அதான் கொடுக்க போறேன்னு” கூறினார். அதற்கு ஆட்சியர் உடனே, “அப்படியா! யார் அந்த குழந்தை அருகில் கூப்பிடுங்க நானே என் கையால தரேனு” கூப்பிட சொன்னார். உடனே, துணை மேயர் அந்த பள்ளி மாணவியை அழைத்து அவர் அருகே கூட்டிச்சென்றார். அப்போது ஆட்சியர் அந்த மாணவியைப் பார்த்து, “நீ எந்த கிளாஸ்மா படிக்கிற. அப்பாவுக்குப் பாதுகாப்பாகத் துணையாக வந்தியாமா?” என ஆட்சியர் விசாரித்தார்.
இதனையடுத்து அந்த பள்ளி மாணவிக்கு கைநிறைய முந்திரி பக்கோடா,முந்திரி ஸ்சுவிட் கொடுத்துச் சாப்பிடுமா சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம் என ஆட்சியரும், துணை மேயரும் மாறி,மாறி தாயுள்ளதோடு அன்புடன் உபசரித்து சேரில் அமரவைத்துச் சாப்பிட வைத்தனர். இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் அந்த மாற்றுத்திறனாளி அப்பாவுக்குச் சக்கர நாற்காலி வழங்க அளித்த மனு பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக அதற்கான ஆணையை அமைச்சர் வழங்கி அவர்களை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.