Little girl case! pocso court convicts

கடலூர் அருகேயுள்ள தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாதன்(28). அங்குள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், தனது நண்பர்களை பார்ப்பதற்காக நெல்லிக்குப்பம் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கு நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி கோபிநாதன், கடந்த 27.02.2020 அன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பிறகு தான் வேலை செய்யும் ஓட்டலுக்கும் அந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Advertisment

இது குறித்து அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கோபிநாதன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சாட்சிகள் விசாரணை முடிவடைந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி தீர்ப்புக் கூறினார்.

அவரது தீர்ப்பில், கோபிநாதன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரசின் ஏதாவது ஒரு திட்டத்திலிருந்து ரூபாய் ஐந்து லட்சத்தை முப்பது நாட்களுக்குள் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.