ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 800-க்கும் அதிகமான பள்ளிகளை மூடுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படாமல் உள்ளது: ஜி.ராமகிருஷ்ணன்

09:18 PM Sep 01, 2018 | bagathsingh


புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அரசுப் பள்ளி பாதுகாப்பு சிறப்புக் கருத்தரங்கில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,

1937 –லேயே மகாத்மா காந்தி கல்வி அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி மக்களுக்கு கல்வி அளிப்பதின் அவசியம் குறித்து விவாதித்துள்ளார். நோபல் பரிசு பெற்றுள்ள ரவீந்திரநாத் தாகூர் துவங்கிய சாந்தி நிகேதன் பள்ளி இன்று மிகப்பெரிய பல்கலைக்கழகமாக வளர்ந்து இருக்கிறது. பம்பாயில் ஜோதிபா பூலே-சாவித்திரி தம்பதியினர், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுந்தரையா உள்ளிட்ட முன்னோர்கள் பள்ளிக்கூடங்களை நடத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளுக்கு மிகப்பெரிய ஆபத்து உருவாகி உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் படிப்படியாக அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்தும், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. கடந்த 2014-ல் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக நிதி ஆயோக் கொண்டுவரப்பட்டது. இந்தக்குழு 50-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டுமெனப் பரிந்துறைத்துள்ளது. இது கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு தட்டிக்கழிக்கும் நடவடிக்கையாகும். இன்றைக்கும் பின்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒன்று முதல் பிஎச்டி வரைக்கும் கல்வியை அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்தியாவில்தான் கல்வியை வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் 800-க்கும் அதிகமான பள்ளிகளை மூடுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படாமல் உள்ளது. என்றாலும், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் போதிய மாணவர்களைச் சேர்க்காவிட்டால் மூடப்படும் நிலை ஏற்படும் என சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏழை மக்களால் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை எப்படி படிக்க வைக்க முடியும்? சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஏழைகளால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. குழந்தை கருவில் இருக்கும்போதே சில தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. இடம் கிடைப்பது உறுதியாகாமலே ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500 வீதம் கட்டணம் வசூலித்து லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நினைத்தால் தனியார் பள்ளிகளை விஞ்சுகிற அளவிற்கு கல்வித்தரத்தையும், மாணவர் எண்ணிக்கையையும் உயர்த்த முடியும் என்பதை இங்கே விருது பெற வந்திருக்கும் நீங்களே சாட்சியாக இருக்கிறீர்கள். ஒப்பீட்டளவில் மற்ற மாவட்டங்களைவிட புதுக்கோட்டையில் அரசுப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகிறது.

முன்னாள் துணைவேந்தர் முனைவர் வசந்திதேவி தலைமையில் அரசுப் பள்ளி பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆசிரியர், பெற்றோர், முன்னாள் மாணவர்களின் கூட்டு முயற்சியால் பல்வேறு அரசுப் பள்ளிகள் காப்பாற்றப்பட்டு வருகிறது. இது தொடர வேண்டும் இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT