Skip to main content

தமிழ்நாட்டில் 800-க்கும் அதிகமான பள்ளிகளை மூடுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படாமல் உள்ளது: ஜி.ராமகிருஷ்ணன்

Published on 01/09/2018 | Edited on 01/09/2018


புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அரசுப் பள்ளி பாதுகாப்பு சிறப்புக் கருத்தரங்கில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,

1937 –லேயே மகாத்மா காந்தி கல்வி அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி மக்களுக்கு கல்வி அளிப்பதின் அவசியம் குறித்து விவாதித்துள்ளார். நோபல் பரிசு பெற்றுள்ள ரவீந்திரநாத் தாகூர் துவங்கிய சாந்தி நிகேதன் பள்ளி இன்று மிகப்பெரிய பல்கலைக்கழகமாக வளர்ந்து இருக்கிறது. பம்பாயில் ஜோதிபா பூலே-சாவித்திரி தம்பதியினர், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுந்தரையா உள்ளிட்ட முன்னோர்கள் பள்ளிக்கூடங்களை நடத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளுக்கு மிகப்பெரிய ஆபத்து உருவாகி உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் படிப்படியாக அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்தும், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. கடந்த 2014-ல் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக நிதி ஆயோக் கொண்டுவரப்பட்டது. இந்தக்குழு 50-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டுமெனப் பரிந்துறைத்துள்ளது. இது கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு தட்டிக்கழிக்கும் நடவடிக்கையாகும். இன்றைக்கும் பின்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒன்று முதல் பிஎச்டி வரைக்கும் கல்வியை அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்தியாவில்தான் கல்வியை வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் 800-க்கும் அதிகமான பள்ளிகளை மூடுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படாமல் உள்ளது. என்றாலும், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் போதிய மாணவர்களைச் சேர்க்காவிட்டால் மூடப்படும் நிலை ஏற்படும் என சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏழை மக்களால் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை எப்படி படிக்க வைக்க முடியும்? சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஏழைகளால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. குழந்தை கருவில் இருக்கும்போதே சில தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. இடம் கிடைப்பது உறுதியாகாமலே ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500 வீதம் கட்டணம் வசூலித்து லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நினைத்தால் தனியார் பள்ளிகளை விஞ்சுகிற அளவிற்கு கல்வித்தரத்தையும், மாணவர் எண்ணிக்கையையும் உயர்த்த முடியும் என்பதை இங்கே விருது பெற வந்திருக்கும் நீங்களே சாட்சியாக இருக்கிறீர்கள். ஒப்பீட்டளவில் மற்ற மாவட்டங்களைவிட புதுக்கோட்டையில் அரசுப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகிறது.

முன்னாள் துணைவேந்தர் முனைவர் வசந்திதேவி தலைமையில் அரசுப் பள்ளி பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆசிரியர், பெற்றோர், முன்னாள் மாணவர்களின் கூட்டு முயற்சியால் பல்வேறு அரசுப் பள்ளிகள் காப்பாற்றப்பட்டு வருகிறது. இது தொடர வேண்டும் இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

''வியாபம் ஊழலை போன்றது தான் டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு''- சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி   

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் இன்று நாகா்கோவிலில் நடந்த பத்திாிகையாளா்கள் சந்திப்பில்.... நாடாளுமன்றத்தில் நேற்று (1-ம் தேதி) குடியரசு தலைவா் உரையில் காந்தி சொன்னதன் அடிப்படையில்தான் அவாின் கனவை நிறைவேற்றும் விதமாக குடியுாிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்றாா். குடியரசு தலைவாின் இந்த கூற்று காந்தியை இரண்டாவது முறையாக படுகொலை செய்ததற்கு சமம்.

 

Interview with CBM G.Ramakrishnan


1955-ல் குடியுாிமை தொடா்பான பிரச்சினைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் மற்ற மாநிலங்களுக்கு தேவையற்றது. உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் அஸ்ஸாமில் மட்டும் தான் அமல் படுத்தப்பட்டுள்ளது. திடீரென்று அரசு இந்த சட்டத்தை மற்ற மாநிலங்களில் கொண்டு வரும்போது தான் எதிா்க்கபடுகிறது. குடியுாிமை வழங்க மதத்தை ஒரு அளவுகோலாக வைக்ககூடிய புதிய ஷரத்தை ஆா்.எஸ்.எஸ், பாஜகவின் அஜெண்டாக கொண்டு வருகின்றனா்.

டிஎன்பிஎஸ்சி குருப்-2,4 தோ்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதின் தகவல்களை பாா்க்கும் போது மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் 15, 20 வருடமாக நடைபெற்ற வியாபம் எனும் மிகப்பொிய ஊழலை போன்றது தான் இந்த குருப் தோ்வு முறைகேடு. இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு குழந்தைகள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய மருந்துகளின் விலைகளை கம்பெனிகள் தாறுமாறாக உயா்த்துவதை கட்டுப்படுத்த மருந்து விலை கட்டுப்பாடு சட்டம் இருந்தது. அந்த  சட்டம் தேவையில்லை என கூறியுள்ளனா். இந்தியாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத திண்டாட்டம், 40 ஆண்டுகளில் இல்லாத மக்களின் வாங்கும் சக்தி குறைவு அதிகாித்துள்ளது என்றாா்.

 

 

Next Story

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆயுதங்களைப் பார்த்து பயப்படுவதில்லை;எழுத்துக்களை பார்த்துத்தான் பயப்படுகிறார்கள்- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

புதுக்கோட்டையில் 3 வது புத்தக திருவிழா 15 ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.  புத்தகத் திருவிழாவில் வாழ்க்கை அழைக்கிறது என்ற தலைப்பில் ஆற்றிய உரை:

 

எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இரவு, பகல் வருகிறது. ஆனால் ஒன்று போல எல்லோருமாக வாழ்கிறோமா? இங்கே ஆணுக்குக் கிடைக்கிற அதிகாரம் பெண்களுக்கு கிடைப்பதில்லை. அதுவும் சமூக செயல்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு கிடைப்பது எல்லாம் அவமானங்களே! சிறகுகள் கொடுத்து மகளை வளர்க்கிறோம். திருமணம் செய்து வைக்கும்போது முதலில் முறிக்கப்படுவது அந்தச் சிறகுகளைத்தான். எவ்வளவு திறமைமிக்கவளாக இருந்தாலும் அங்கு வெறும் பெண்தான். முதலில் சுதந்திரத்தை வீட்டில் இருந்து கற்றுக்கொடுக்க வேண்டும். 

 

writer s.ramakrishnan speech!!

 

ஒரு காலத்தில் பிள்ளைபிடிப்பவர்கள் இருந்ததாக அறிய முடிகிறது. இன்றைக்கு நர்சரிப் பள்ளிகள் அந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. குழந்தைக்கு தரமாக கல்வி அவசியம்தான். ஆனால், அது எந்த வயதில், எந்தமாதியான கல்வி என்பது முக்கியம். வண்டிக்கு பெட்ரோல் நிரப்புவது போல குழந்தைக்கு கல்வியை புகட்ட நினைப்பது தவறு. அது வாழ்க்கையை புரிந்துகொள்வதாக இருக்க வேண்டும்.

 

இன்றைக்கு பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் நமக்கு கசக்கிறது. அறிவுரை என்பது அனுபவம். அது முக்கியம். மூத்தவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். நாளை நாம் அந்த கட்டத்தை அடைந்தே தீருவோம் என்பதை மறந்துவிடாதீர்கள். தாத்தாக்களை பேரன்களோடு பேசவிடுங்கள். மனிதகுல வரலாறு குழந்தைகள் வழியாக மீண்டும் நிகழ்த்திக் காட்டப்படுகிறது.

 

கற்றறிந்த உங்களைப் போன்றவர்களுக்கு ஒரு நகைச்சுவை நடிகனுக்குக்கான மரியாதைகூட தரப்படுவதில்லையே என்று ஒரு கல்லூரி விழாவில் என்னிடம் கேட்டார்கள். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு என்ன மரியாதை இருந்தது. ஆனால், 2500 ஆண்டுகளாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கவிச்சக்கரவர்த்தி கம்பன், பாரதி, புதுமைப்பித்தன், கபிலர், சேக்கிழார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி நடத்தப்பட்டார்கள். ஆனால் இன்றைக்கும் அவர்களைக் நாம் கொண்டாடுகிறோமே! கலைகள் காலத்தைத் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கும். தமிழில் எழுதுகிறோம் என்பதே எனக்குப் பெருமைதான்.

 

ஒரு முழு நிலவை பாலைவனத்தில் நின்று ரசித்துப் பாருங்கள் பரவச நிலையை அடைவீர்கள். அது உண்மையிலேயே அமுதத்தைப் பொழிந்துகொண்டிருக்கும். வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் ஒவ்வொரு நாளும் அது உங்களுக்கு கற்றுத்தரும். வாழ்கை ஆயிரம் கோடி இன்பம் கொண்டது. ஒரு சாதாரண மீன் கடலைத் தாண்டிச் செல்கிறது. சைபீரியாவில் உள்ள ஒரு பறவை இங்கு வந்து முட்டையிட்டு இனவிருத்தி செய்கிறது. மனிதன் மட்டும் இருந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்கிறான். உங்கள் குழந்தைகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அது அவர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுக்கும். அனுபவத்திற்கு இடையேதான் வாழ்க்கை இருக்கிறது.

 

இதர திருவிழாக்களைப் போல புத்தகத் திருவிழாக்களை நடத்துவது அவ்வளவு எளிதல்ல. இதுபோன்ற சிறிய ஊர்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவது மிக முக்கியமான பணியாகும். தமிழகத்தில் புத்தகத் திருவிழாக்கள் ஒரு பண்பாட்டு இயக்கமாக, அறிவு இயக்கமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாமே இதுபோன்ற விழாக்கள். புத்தகத் திருவிழாக்களில் பேச அழைக்கும்போதெல்லாம் நான் மறுப்பே சொல்வதில்லை. காரணம் இங்குதான் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்.

 

நான் படித்த எந்தப் புத்தகமும் என்னை தவறாக வழிநடத்தியதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆயுதங்களைப் பார்த்து பயப்படுவதில்லை. எழுத்துக்களை, கலைகளைப் பார்த்துத்தான் பயப்படுகிறார்கள். இளைஞர்களின் எதிர்காலம் புத்தகங்களில்தான் இருக்கிறது. புத்தகத் திருவிழா என்பது வெறும் வணிகச் சந்தை அல்ல. அது அறிவை அச்சிட்டுத்தரும் பொக்கிசம். நீங்கள் அறிவைப் பெறுங்கள். பெற்ற அறிவை மற்றவர்களுக்காகப் பயன்படுத்துங்கள். இவ்வாறு பேசினார்.