Skip to main content

72 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கையில் மின்வெளிச்சம்.... மகிழ்ச்சியில் மலைவாழ் மக்கள்!

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

நெல்லை மாவட்டத்தின் தென் மேற்குத் தொடர்ச்சி மலை பரந்து விரிந்து செல்கிற அம்பை பாபநாசம் பகுதி மலையில் வழி வழியாய் வாழ்ந்து வருகிற மலைவாழ் பழங்குடியினரின் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம்.

 



தேசம் விடுதலை பெற்ற பிறகும் முக்கால் நூற்றாண்டாக மண்ணெண்ணைச் சிமினியின் அரையிருட்டில் வசித்து வந்த அந்த 48 குடும்பங்களின் வீடுகளுக்கு மின்சாரம் நேற்று முன்தினம் எட்டிப்பார்த்துக் கொட்டிய வெளிச்சத்தால் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் அந்தக் காணிக் குடியிருப்பு வாசிகள். மலைமீது காரையாறு அகஸ்தியர் காணிக்குடியிருப்பு சின்னமயிலாறு, சேர்வலாறு போன்ற பகுதிகளில் கொடிய விலங்குகள் ராஜநாகங்கள் உறைகிற இடங்களில் பழங்குடியின மக்கள் தங்கள் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்கள். இதில் சேர்வலாறு, காரையாறு, மற்றும் அகஸ்தியர் காணிகுடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஏற்கனவே மின்சார வசதிகள் உள்ளன.

 

  light after 72 years- People in happiness!



ஆனால் காரையாறு ஓரத்தில் சின்னமயிலாறு காணிகளின் குடியிருப்புகளான 48 வீடுகளுக்கு மட்டும் மின்சார வசதி தரப்படவில்லை. தேசம் சுதந்திரமடைந்து தற்போதைய வருடம் வரை, அதாவது 72 வருடங்களாக அந்த மலைப் பழங்குடியின மக்கள் கொடிய விலங்குகளுக்கு அஞ்சியவாறு அவைகளின் மத்தியில் குடும்ப உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் பொழுதை நகர்த்தி வந்துள்ளனர்.

 

 



தங்களின் உயிர் நெருக்கடி வாழ்வினைச் சுட்டிக் காட்டிய மின்சார வசதியைப் பெற அரசு மற்றும் மின்சாரத் துறைக்கு கோரிக்கைப் போர் அசராமல் நடத்தி வந்திருக்கின்றனர். அந்தப் பகுதிகளில், வனவிலங்குகள் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி என்று வனத்துறையினர் தடுத்தும் சிக்கல்களையும் தெரிவித்தனர். மத்திய சுற்றுச் சூழல் துறையும்  இதையே காரணம் காட்டி மின் இணைப்பை மறுத்தது.

 



ஆனால் கோரிக்கையில் தளர்ந்து விடாத காணியினமக்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் நல்ல காலம். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மின்சாரம் வழங்க ஒப்புதலானது, நெல்லை மாவட்ட கள இயக்குனர் மற்றும் தலைமை வனக் காவலர் கைரத் மோகன்தாஸ் துணை இயக்குனர் கொம்மு ஓம்கார் போன்றவர்களின் முயற்சியால் பழங்குடியின மக்களின் 48 வீடுகளுக்கும், வனத்துறையின் நிதி உதவியுடன் நேற்று முன்தினம் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதற்கென்று 100 கே.வி.ஏ. மின்மாற்றி மற்றும் 38 மின் கம்பங்கள் வசதிகளுடன் அந்த வீடுகளுக்குள் வெளிச்சம் பாய்ந்தது.

 


72 வருடங்களுக்குப் பின்பு தங்களது வாழ்க்கையில் எட்டிய வெளிச்சம் தங்கள் மக்களுக்கான விடியல் என்ற மலைப்பிலிருக்கின்றனர் மலைப் பழங்குடியினர். நிகழ்வுகளில் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் விஜயராஜ் வனச்சரகர் சரவணக் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அதிசயங்கள் நினைத்த நேரத்தில் நடந்து விடுவதில்லை. அரிதிலும் அரிதாகத்தான் நிகழும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கூகுள் மேப்பால் வழிமாறிய வடநாட்டு சாமியார்கள்; அதிர்ச்சியில் உறைந்த மணமேட்டுப்பட்டி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Northern preachers who were diverted by Google Maps; The public surrounded

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.