
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நேற்று (23ம் தேதி) நடைபெற்ற எண்ணித் துணிக நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அவர், “நான் தமிழ் மொழியை முழுமையாகக் கற்று, அதனை நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதை வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டுள்ளேன்” என்று பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; “எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான திருக்குறளை புதிதாக உருவான நாகரிகத்துடன் தொடர்புப்படுத்தி பார்க்க முடிகிறது என்றால், அது தான் தமிழ் மொழியின் சிறப்பு. தமிழில் அறம் என்ற சொல்லுக்கு இணையான மொழிபெயர்ப்பை எந்த ஐரோப்பிய மொழியிலும் நான் கண்டதில்லை.
இந்திய அளவில் தமிழுக்கு இணையாக பழமையான மொழியாக சமஸ்கிருதம் மட்டுமே உள்ளது. தமிழ் இலக்கியங்களின் சிறப்பை, தமிழ் மொழியின் செறிவை தமிழ் மொழியில் படித்தால்தான் ரசிக்கவும், ருசிக்கவும் முடியும். தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்பவர்கள் அதன் கருத்துகளை விரிவாக விளக்க வேண்டும். நான் தமிழ் மொழியை முழுமையாகக் கற்று, அதனை நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதை வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டுள்ளேன். இலக்கிய மொழிபெயர்ப்பு பணிகளுக்கு பல்கலைக்கழகங்கள் உறுதுணையாக இருக்கும்” என்றார்.