life of the wife who separated in front of her husband!

ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (24). இவரது மனைவி பிரியா (20). பிரியா ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பிரவீன்குமார் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி பிரியாவை அழைத்துக் கொண்டு அவர் வேலை பார்க்கும் கடையில் விடுவதற்காகக் கிளம்பிச் சென்றனர். பிரவீன்குமார் வண்டியை ஓட்ட பின்னால் பிரியா அமர்ந்து வந்து கொண்டிருந்தார்.

Advertisment

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவைக் கடந்து பிரவீன்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பின்னால் வந்த ஒரு மினி பஸ் பிரவீன்குமாரை கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மினி பஸ், பிரவீன் குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி பிரவீன்குமார் ரோட்டில் இடதுபுறம் விழுந்தார். பிரியா வலது புறமாக தவறி விழுந்தார். அப்போது மினி பஸ்சின் பின்பக்க சக்கரம் பிரியா தலையில் ஏறி இறங்கியது. இதில் பிரியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தன் கண்ணெதிரே மனைவி பிரியா இறந்ததைக் கண்டு பிரவீன்குமார் கதறி துடித்தார்.

Advertisment

இதனால் பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மினி பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரவீன்குமார்-பிரியா தம்பதியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment